போலி அறிக்கைகளை முன்வைக்கும் வெரித்தே ரீசர்ச் ஆய்வு நிறுவனம் : ஐக்கிய தேசிய கட்சி சுட்டிக்காட்டு
வெரித்தே ரீசர்ச் ஆய்வு நிறுவனத்தின் தலைமை அதிகாரி, சிறிலங்கா நாடாளுமன்றத்தின் பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழுவில் உறுப்பினர் பதவியை எதிர்பார்த்திருந்ததாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
எனினும், இந்த குழுவில் பதவி வழங்கப்படாமை காரணமாக குறித்த நிறுவனம் போலியான ஆய்வறிக்கைகளை முன்வைப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போது மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவாக வெரித்தே ரீசர்ச் ஆய்வு நிறுவனம் ஆய்வு அறிக்கைகளை வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெரித்தே ரீசர்ச் ஆய்வு நிறுவனம்
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது அரசாங்கத்துக்கு மக்கள் ஆதரவு குறைவடைந்துள்ளமை தொடர்பில் வெரித்தே ரீசர்ச் ஆய்வு நிறுவனம் அண்மையில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.
இது தொடர்பில் பல விமர்சனங்களும் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், வெரித்தே ரீசர்ச் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தை ஏற்றுக் கொள்ள முடியாதென பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.