சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் ரணில் விக்ரமசிங்க : ஜீ. எல். பீரிஸ் குற்றச்சாட்டு
சிறிலங்காவின் அரசியலமைப்பு குறித்த எந்தவொரு அக்கறையும் இல்லாது அதிபர் ரணில் விக்ரமசிங்க செயல்படுவதாக நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் சுதந்திர மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் ஜீ. எல். பீரிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, ஜீ. எல். பீரிஸ் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அத்துடன், சிறிலங்கா காவல்துறை மா அதிபரின் நியமனம் தொடர்பில் அரசியலமைப்பின் தீர்மானத்தை மீறி ரணில் விக்ரமசிங்க செயல்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறை மா அதிபர்
காவல்துறை மா அதிபர் சீ.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்திருந்தாக ஜீ. எல். பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், அவரது சேவைக்காலம் இதுவரை நான்கு தடவைகள் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான்காவது முறையாகவும் சீ.டி.விக்ரமரத்னவின் சேவைக்காலத்தை நீடிக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க அரசியலமைப்பு பேரவையிடம் அனுமதி கோரியிருந்தாலும் குறித்த அனுமதியை வழங்க பேரவை மறுத்திருந்தது.
செயல்முறை
காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட வேண்டிய நபரின் பெயர்கள் அதிபர் செயலகத்தால் அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் இதனை தொடர்ந்து, பேரவையின் அனுமதியுடன் காவல்துறை மா அதிபர் நியமிக்கப்பட வேண்டுமெனவும் ஜீ. எல். பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
எனினும், சீ.டி.விக்ரமரத்னவின் நியமனம் தொடர்பில் சிறிலங்கா அதிபர் குறித்த செயல்முறையை பின்பற்றவில்லை எனவும் அரசியலமைப்பு பேரவையின் தீர்மானத்தை மறுத்து செயல்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது ஒரு சட்ட விரோதமான செயல் என்பதோடு தவறான உதாரணம் எனவும் ஜீ. எல். பீரிஸ் மேலும் கூறியுள்ளார்.