விதுர விக்ரமநாயக்க பதவி விலக வேண்டும்..! சுமந்திரன் - சாணக்கியன் வலியுறுத்தல்
சிறிலங்கா புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க பதவி விலக வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்கா தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க அண்மையில் பதவி விலகியிருந்த நிலையில், அவருக்கு பதிலாக விதுர விக்ரமநாயக்க பதவி விலகியிருக்க வேண்டுமென இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் கூறியுள்ளார்.
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பு குறித்து சமூக ஊடகங்களிலும் செய்திகளிலும் பரவலாக பேசப்படுகிறது.
சிறிலங்கா தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்கவுக்கு ரணில் விக்ரமசிங்க வரலாறு கற்பிப்பது தொடர்பான காணொளியே இவ்வாறாக பேசப்படுகிறது.
இந்த சந்திப்பில் நானும் கலந்து கொண்டிருந்தேன். தேவையற்றதாக கருதப்படும் சுமார் மூவாயிரம் ஏக்கர் நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
சாதாரண மக்கள் விவசாயத்துக்கு பயன்படுத்திய மற்றும் தற்போது தொல்பொருள் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு வாழ் மக்களின் மாத்திரமின்றி இலங்கையில் உள்ள அனைத்து மக்களினதும் இடங்கள் விடுவிக்கப்பட வேண்டுமென சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் கோரப்பட்டிருந்தது.
மக்களின் வாழ்வாதாத்தை பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக அனுர மனதுங்க முந்தைய கூட்டங்களில் ரணில் விக்ரமசிங்கவுக்கு உறுதியளித்திருந்தார். எனினும், தற்போது அவற்றை செய்ய முடியாதென கூறினார்.
இதனை தொடர்ந்து, சிறிலங்கா அரசாங்கத்தின் கொள்கைகளுக்கிணங்க செயல்பட முடியாத பட்சத்தில் அவர் பதவி விலகுவதை தவிர்த்து வேறு வழிகள் கிடையாதென ரணில் விக்ரமசிங்க கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பில் சிறிலங்கா அதிபர் சட்ட நடவடிக்கைகள் எடுப்பாரேயானால், முதலில் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவுக்கு எதிராக எடுக்க வேண்டும்.
அனுர மனதுங்க தவறான தீர்மானங்களை மேற்கொள்ள இடமளித்த மற்றும் வழிகாட்டிய விதுர விக்ரமநாயக்க சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். விதுர விக்ரமநாயக்கவுக்கு எதிராக சிறிலங்கா அதிபர் இதுவரை ஏன் எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது குறித்து நாம் கேள்வியெழுப்ப வேண்டும்.
எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை கருத்தில் கொண்டு ரணில் விக்ரமசிங்க அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காதிருக்கிறாரா என்பது எனக்கு தெரியாது என்று தெரிவித்தார்.
சுமந்திரன் வலியுறுத்தல்
இதேவேளை, விதுர விக்ரமநாயக்கவை சிறிலங்கா அதிபர் பதவி விலக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் இடம் பெறும் சட்டவிரோத காணி அபகரிப்புகள் விதுர விக்ரமநாயக்கவின் பணிப்புரைக்கமைய நடைபெறுவதாகவும், இதனடிப்படையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டுமெனவும் சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
