கைது செய்யப்படுவரா தவெக தலைவர் விஜய்: வெளியான அறிக்கை
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் (Vijay) கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கரூரில் நேற்று (27) தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான பிரசார கூட்டம் இடம்பெற்றது.
இந்த பிரசார கூட்டத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோரிக்கை
இந்தநிலையில், விஜயை கைது செய்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுதொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் பொன்னுசாமி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
ஆபத்தான நிலை
குறித்த அறிக்கையில், “கரூரில் நடைபெற்ற த.வெ.க தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் முப்பதிற்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளனர்.
இன்னும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மற்றும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அங்கிருந்து வரும் தகவல்கள் மிகுந்த கவலையளிப்பதாக இருக்கின்றது.
தமிழக அரசியல் வரலாற்றில் கறுப்பு தினமாக அமைந்த இந்நாளில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்.
கூட்ட நெரிசல்
அத்துடன் கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைந்தோர் குடும்பத்தினருக்கு இதுவரை ஒரு அனுதாப மற்றும் ஆறுதல் செய்தி கூட வெளியிடாமல் இருப்பதோடு அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க நேரில் செல்ல முயற்சி செய்யாத விஜயிற்கு கடும் கண்டனங்கள்.
அண்டை மாநிலமான ஆந்திராவில் புது திரைப்பட வெளியீட்டு சமயத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர் ஒருவர் மரணமடைந்த போது அப்படத்தின் கதாநாயகனான நடிகர் அல்லு அர்ஜுனா கைது செய்யப்பட்டார்.
இதைபோல், சுமார் முப்பதிற்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைய காரணமாக இருந்த பிரச்சார கூட்டத்தின் கதாநாயகனான நடிகர் விஜய் கைது செய்யப்பட்டு உரிய சட்டரீதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
