தவெக பிரசாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசியல் தலைமைகள் இரங்கல்!
தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசியல் தலைமைகள் தங்களது இரங்கல்களை வெளியிட்டுள்ளனர்.
கரூரில் இன்று (27) தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் (Vijay) தலைமையிலான பிரசார கூட்டம் இடம்பெற்றது.
இதில் கூட்ட நெரிசலில் சிக்கி 29 பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் 22 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உடனடி சிகிச்சை
இந்த சம்பவம் தொடர்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (M.K Stalin) மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K. Palaniswami) கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதில் உயிரிழந்த மக்களுக்கு தமது இரங்கல்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி (V. Senthil Balaji), அமைச்சர் சுப்ரமணியன் மற்றும் மாவட்ட ஆட்சியரையும் தொடர்பு கொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.
மருத்துவமனையில் சிகிச்சை
அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷிடம் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன்.
அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ADGP-யிடமும் பேசியிருக்கிறேன்.
பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.
அத்துடன் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் பேசுகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29 இற்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்ததாகவும் மற்றும் பலர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றது.
தேவையான நடவடிக்கை
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் நேரடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கே அனுமதிக்கப்பட்டாருக்கான உதவிகளை வழங்க பணித்துள்ளேன்.
எனது அறிவுறுத்தலின்படி, மருத்துவமனை உள்ள பகுதியில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் அதிமுக தொண்டர்கள் மனிதச் சங்கிலி அமைத்து, சிகிச்சை பெறுவோருக்கான உரிய உதவிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக தமிழக அரசு மேற்க்கொள்ளவும் மற்றும் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வலியுறுத்துகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
