புதிதாக சேர்க்கப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர்கள் :வெளியான அதிர்ச்சி தகவல்
புதிதாகப் பணியமர்த்தப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர்களில் 15% முதல் 20% வரையானோர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்றும், இதன் விளைவாக, ஜனவரி முதல் 68 அதிகாரிகள் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் ஒழிப்பு விசேட தேசிய வேலைத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்ட அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
குற்றங்களுக்கும் போதைப் பொருட்களுக்கும் நேரடி தொடர்பு
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கும் போதைப் பொருட்களுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாகவும், அதன் படிப்படியான பரவல் மூலம் நாட்டின் பிள்ளைகள் அதற்கு பலியாகியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஒரு நல்ல மற்றும் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப சிறந்த மனித வளம் இருக்க வேண்டும். இந்த போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு இரையாகச் செய்வதன் மூலம் ஒரு நல்ல சமூகத்தை உருவாக்க முடியாது. இது நாட்டின் எதிர்கால சந்ததியினரை அழிக்கும் .
சிறைகளில் உள்ள குற்றவாளிகள்
சிறைகளில் உள்ள குற்றவாளிகளில் 72% பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களாக இருக்கின்றனர். அந்த எண்ணிக்கை 100% ஆக அதிகரித்தால், சமூகத்தில் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
நாடு எவ்வளவு பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்தாலும், நாட்டின் எதிர்கால சந்ததியினர் இந்தப் பேரழிவிற்கு பலியானால், நாம் ஒரு நாடாக வளர்ச்சியடைய முடியாது.
இந்தப் பேரிடருக்கு தீர்வாக, அடுத்த 10 முதல் 12 நாட்களுக்குள் ஜனாதிபதியின் தலைமையில் நாட்டில் போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
