முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவுக்கு பிணை
புதிய இணைப்பு
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட லொறியை பயன்படுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (20) காலை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
30 நிமிட சமர்ப்பணங்களுக்கு பின்னர் நீதவான் அவரை 200,000 ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதித்ததுடன், வழக்கை அடுத்த மாதம் 6 ஆம் திகதி மீண்டும் அழைப்பதற்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (20) காலை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட பாகங்கள், போலி இயந்திரம் மற்றும் சேசி எண்களைக் கொண்ட லொறியைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் விஜித் விஜயமுனி சொய்சா நேற்று (19) வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
நேற்று (19) கைது செய்யப்பட்ட சந்தேகநபரான முன்னாள் அமைச்சர், பின்னர் ஹப்புத்தளை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
இதற்கிடையில், விஜித் விஜயமுனி சொய்சாவின் நலனை விசாரிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க (Chamara Sampath Dassanayake) இன்று (20) காலை நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா (Vijith Vijithamuni Soysa) வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்றைய தினம் (19.01.2025) இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிப்பாகங்களைப் பயன்படுத்தி வாகனத்தை ஒன்று சேர்த்ததோடு, அதற்காக போலி ஆவணங்களைத் தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது நடவடிக்கை
அதற்கமைய, கைது செய்யப்பட்ட விஜித் விஜயமுனி சொய்சா நாளை (20.01.2025) பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, இதே போன்று சட்டவிரோதமான முறையில் வேறு வாகனங்களை தயாரித்து பயன்படுத்தியுள்ளாரா என்பது தொடர்பிலும் வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று வாக்குமூலம் வழங்குவதற்காக வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவில் முன்னிலையாகி இருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் சுமார் 5 மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
