சரணடைந்தார் விமல் வீரவன்ச - நீதிமன்றம் கடும் எச்சரிக்கை
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் அல் ஹுசைனின் இலங்கை விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணையை மீளப்பெற்றுள்ளது.
அத்துடன் பலத்த எச்சரிக்கையுடன் இன்று (21) பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (21) நீதிமன்றில் சரணடைந்த போதே இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
நீதிமன்றம் எச்சரிக்கை
இதன்மூலம், சந்தேகத்திற்குரிய முன்னாள் அமைச்சருக்கு நீதிமன்றில் முன்னிலையாக தவறக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக நீதிமன்றம் திறந்த நீதிமன்றில் அறிவித்தது.
இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச நீதிமன்றில் முன்னிலையாக தவறியதால், நீதிமன்றம் நேற்று முன்தினம் (19) பிடியாணை பிறப்பித்தது.
ஐ.நா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
2016ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் இளவரசர் சைட் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்த போது, பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் பிரதிவாதிகள் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக நெடுஞ்சாலையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக குருந்துவத்தை காவல்துறையினர் நீதிமன்றில் அறிவித்திருந்தனர்.