புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீது திடீர் கரிசனை கொண்ட விமல் வீரவன்ச
புலம் பெயர் தமிழ் அமைப்புகள் தொடர்பில் திடீர் கரிசனை
புலம் பெயர் தமிழ் அமைப்புகள் தொடர்பில் திடீர் கரிசனை கொண்டு கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச.
அண்மையில் சிறிலங்கா அரசாங்கம் ஆறு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் 317 தனிப்பட்டவர்கள் மீதான தடையை நீக்கியிருந்தது. இதற்கு காரணம் அண்மையில் நடைபெறவுள்ள ஜெனிவா கூட்டத் தொடரே என தெரிவிக்கப்படுகிறது.
டொலரை நாட்டிற்கு வரவழைக்கும் அரசின் திட்டம்
எனினும் நாடு நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் புலம்பெயர்ந்தவர்கள் மூலம் பெருமளவு டொலரை நாட்டிற்கு வரவழைக்கும் அரசின் திட்டமும் இதில் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீது நியாயமற்ற வகையில் தடை விதிக்கப்பட்டால் அதனை நீக்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால்
புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் கடந்த காலங்களில் கொண்டிருந்த கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால், அவர்கள் நாட்டுக்கு டொலர்களைக் கொண்டுவந்தாலும் வராவிட்டாலும் அந்த அமைப்புகள் மீது நியாயமற்ற முறையில் தடை விதிக்கப்பட்டிருந்தால் அவற்றை நீக்குவதில் பிரச்சினை இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், டொலரையும் புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை நீக்கத்தையும் முடிச்சுப் போட முடியாது. அவ்வாறு செய்யும் பட்சத்தில், தேசியப் பாதுகாப்பை விட டொலரே முக்கியமான ஒன்றாக முடியும் எனவும் தெரிவித்தார்.