அதிகாரப் போட்டியால் சூடானின் வெடித்த வன்முறை - இலங்கையர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!
சூடானில் வசித்து வந்த இலங்கையர்களில் ஒரு தொகுதியினர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அண்மையில் சூடானில் ஏற்பட்ட வன்முறை காரணமாக நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதோடு, பல்லாயிரக்கணக்கானோர் காயங்களுக்குள்ளாகியிருந்தனர்.
இதன் பின்னணியிலேயே சூடானில் வசித்து வந்த ஒரு தொகுதி இலங்கையர்கள் பாதுகாப்பாக குறித்த நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த 15 ஆம் திகதி சூடானின் கார்ட்டூமில் வன்முறை வெடித்தது. அந்நாட்டின் இராணுவத்திற்கும் துணை இராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும் (RSF) இடையே பல வாரங்களாக முறுகல் ஏற்பட்டது.
சூடான் வன்முறை
சூடானில் அதிகரித்து வரும் அதிகாரப் போராட்டம் ஆரம்பத்தில் தலைநகர் கார்ட்டூமில் மோதலுக்கு வழிவகுத்தது. பின்னர் அது விரைவில் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது.
இதன் காரணமாக 460 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அத்துடன் குறைந்தது 4,000 பேர் வரை காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
2021 ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய இரு குழுக்களும் ஒரு காலத்தில் பங்காளிகளாக ஒன்றாகப் பணியாற்றினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு குழுக்களும் இணைந்து ஆட்சியைக் கைப்பற்றவே முயன்றனர். ஆனால் தற்போது அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் எதிராக களம் இறங்கியிருப்பது சூடான் நாட்டில் மோதல்களை தோற்றுவித்துள்ளது.
வெற்றிகரமாக வெளியேற்றப்பட்ட குழு
இந்த மோதலில் சூடான் நாட்டு இராணுவ தளபதியும் அதிபருமான ஃபத்தா அல்-புர்ஹான் ஒரு புறமும், துணை இராணுவப் பிரிவான ஆர்.எஸ்.எஃப். தலைவர் ஜெனரல் ஹம்தான் தாகலோ மறுபுறமும் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் வசித்து வந்த இலங்கையர்களின் முதல் குழுவே வெற்றிகரமாக, அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அதற்கமைய சூடானில் உள்ள 41 இலங்கையர்களில் 13 பேர் சவூதி அரேபியாவில் உள்ள ஜெத்தா துணைத் தூதரகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், பதில் தூதரக அதிகாரியால் அவர்கள் வரவேற்கப்பட்டனர்.
மேலும் சூடானில் சிக்கியுள்ள எஞ்சிய இலங்கையர்கள், இந்தியா அல்லது சவூதி அரேபியாவின் உதவியுடன் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவார்கள் எனவும் சிறிலங்கா அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
