இஸ்ரேலியர்களுக்கு இலவச விசா: அரசாங்கத்தின் முடிவுக்கு கிளம்பியது எதிர்ப்பு!
அரசாங்கத்தின் இஸ்ரேலிய குடிமக்களுக்கான விசா இல்லாத கொள்கை முடிவை ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்விக்குட்படுத்தியுள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரஹ்மான், பாலஸ்தீனத்திற்கு எதிரான போரை உலகம் கண்டிக்கும் நேரத்தில் அரசாங்கம் இஸ்ரேலுடன் இணைந்து செயல்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் வரலாறு
பல நாடுகள் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்ட கொடூரமான நடவடிக்கைகள் மற்றும் இனப்படுகொலை பிரச்சாரங்களைக் கண்டித்து வரும் நேரத்தில், எங்கள் அரசாங்கம் இஸ்ரேலுடன் இணைந்து செயல்படுவதாக அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் இலங்கையின் நீண்டகால பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் வரலாற்றிலிருந்து விலகிச் சென்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியில் இருந்தபோது, ஜனாதிபதியும் அவரது கூட்டாளிகளும் தூதரகங்களுக்கு வெளியே பாலஸ்தீன உரிமைகளுக்காக குரல் கொடுத்து, ஆர்ப்பாட்டம் செய்ததை சுட்டிக்காட்டிய ரஹ்மான், தற்போது அவர்கள் கொள்கையில் முழுமையான தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
இந்த நிலையில், போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு நாட்டை இலங்கையில் எந்தவித விசாரணையும் இல்லாமல் சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பது என்ற அரசாங்கத்தின் முடிவு குறித்து அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும், இஸ்ரேலிய உளவுத்துறை நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத மையங்கள் இலங்கைக்குள் சுதந்திரமாக செயல்பட அரசாங்கம் அனுமதித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் ரஹ்மான், இந்த நடவடிக்கைகள் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாக அமைகின்றதாகவும் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
