நுழைவு விசாக்களை பயன்படுத்தி மோசடி..! வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு எச்சரிக்கை
நுழைவு விசா
நுழைவு விசாக்களை (விசிட் விசாக்களை) பயன்படுத்தி வெளிநாட்டு தொழில் மோசடியில் ஈடுபடும் குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
விமான நிலைய சேவைகள், குடிவரவு மற்றும் குடியகல்வு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆள் கடத்தலில் ஈடுபடும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
கண்காணித்து வரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம்
விமான நிலையம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இவ்வாறான மோசடிகளை கண்காணித்து வருவதாக அமைச்சர் நாணயக்கார தெரிவித்தார்.
SLBFE இல் பதிவு செய்யப்படாத தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு குழுவை நடத்துவதாகவும் சுட்டிக்காட்டினார்.
நுழைவு விசாக்களை (விசிட் விசாக்களை) பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு வேலைக்காக அனுப்பும் செயல்பாடுகளில் குழு ஒன்று ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மூலம் வேலை தேடுவதற்காக விசிட் விசாவில் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அவர் நாட்டு இளைஞர்களைக் கேட்டுக்கொண்டார்.