மின் கட்டண ஏற்ற இறக்கங்களை குறைப்பதற்கான வழி! வெளியிடப்பட்டுள்ள தகவல்
இலங்கை அனல் மின் உற்பத்தியைச் சார்ந்திருப்பத்தைக் குறைத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் பயன்பாட்டை அதிகரித்தால் மின் கட்டண ஏற்ற இறக்கங்களைக் குறைக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் கே. பி. எல். சந்திரலால் தெரிவித்துள்ளார்.
இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், சமீபத்திய ஆண்டுகளில் மின் கட்டணங்கள் அடிக்கடி மாறுபடுவதற்கு அனல் மின் உற்பத்திக்காகும் அதிக செலவே முக்கிய காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, தொடர்ந்து அனல் மின்சாரத்தையே நம்பியிருக்காமல் சூரிய சக்தி உள்ளிட்ட கிடைக்கக்கூடிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களை நாடு அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மின் உற்பத்திச் செலவு
மேலும், அனல் மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதால், அது நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்புக்குக் கடும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகச் சந்தையில் எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் இறக்குமதி எரிபொருள் செலவையும், அதன் மூலம் மின் உற்பத்திச் செலவையும் நேரடியாகப் பாதிக்கின்றன.
எனவே, நாட்டின் மின்சார உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்களிப்பை அதிகரிப்பது உற்பத்திச் செலவு மாற்றங்களைக் கட்டுப்படுத்தி, மின் கட்டணங்களில் ஒரு நிலையான தன்மையை உறுதிசெய்ய உதவும் என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9