கியூபாவோ வெனிசுலாவோ அல்ல இது ஈரான்: அமெரிக்கா தாக்கும் வரை காத்திருக்காது:கரிபாபாடி
அமெரிக்காவுடனான உறவுகளில் ராஜதந்திரம், பொருளாதாரத் தடை மற்றும் ராணுவத் தாக்குதல் ஆகிய மூன்று சாத்தியமான சூழ்நிலைகளுக்கு ஈரான் தயாராகி வருவதாக ஈரான் வெளியுறவு துறை இணை அமைச்சர் காசெம் கரிபாபாடி தெரிவித்துள்ளார்.
அந்நாட்டு அரசு தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
"ஈரான் என்பது நீங்கள் (அமெரிக்கா) முற்றுகையிடக்கூடிய கியூபா அல்ல, சரணடையச் செய்யக்கூடிய வெனிசுலாவும் அல்ல" என்று கூறிய அவர் வான்வழி அல்லது தரைவழி முற்றுகைகள் மூலம் அமெரிக்கப் படைகள் இதுவரை எந்த வெற்றியையும் அடையத் தவறிவிட்டன என்றும் குறிப்பிட்டார்.
ஈரான் காத்திருக்காது
மற்றொரு தாக்குதலுக்கு களம் அமைப்பதற்காக அமெரிக்கா ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை பயன்படுத்தக்கூடும் என்று சந்தேகம் தெரிவித்த அவர் அமெரிக்கா தாக்கும் வரை ஈரான் காத்திருக்காது என எச்சரித்தார். ஈரான் இன்னும் போர் நிலையில்தான் உள்ளது என்றும், தற்போதைய நிலையைப் போராகவும் கருதாமல் அமைதியாகவும் கருதாமல் இருப்பதாக அவர் கூறினார்.

ஈரானின் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டு, போர் நிரந்தரமாக முடிவுக்கு வரும் வரை, ஈரானின் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகமையை அனுமதிக்க முடியாது எனவும் கரிபாபாடி கூறினார்.
மோதலின்போது சேதமடைந்த இடங்கள் உட்பட, தனது அணுசக்தி நிலையங்களுக்கு ஆய்வாளர்களை மீண்டும் அனுமதிக்குமாறு ஈரானை ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு வலியுறுத்தியுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளின்போது அமெரிக்கா ஈரானின் நம்பிக்கையை மீண்டும் மீண்டும் சிதைத்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில், அமெரிக்கா தனது தீய நோக்கங்களை குறைந்தபட்சம் மூன்று முறையாவது வெளிப்படுத்தியுள்ளது. இது, ராஜதந்திரப் பேச்சுவார்த்தை மேசையில் அமெரிக்காவை நம்ப முடியாது என்பதைக் காட்டுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |