தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய சிவாஜிலிங்கத்தை இழந்துவிட்டோம் - அமைச்சர் சந்திரசேகர் இரங்கல்
தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும், தமது கொள்கைகளுக்காகவும் இறுதிவரை சமரசமின்றிப் போராடிய சிரேஷ்ட அரசியல்வாதியும், தற்போதைய வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரமும் அடைவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இரங்கல் கடிதமொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நேற்றைய தினம் அவர் இயற்கை எய்தினார் என்ற செய்தி வடக்கு, கிழக்கு மற்றும் முழு நாட்டினதும் அரசியல் களத்தில் ஒரு பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவாஜிலிங்கம் விடுதலைப்புலிகளின் தலைவரின் பெற்றோர்களை இறுதிவரை பாதுகாத்தவர் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
மக்களின் குரலாக சிவாஜிலிங்கம்
'அரசியல் ரீதியாக எமக்கிடையே வெவ்வேறு நிலைப்பாடுகளும் மாறுபட்ட கருத்துக்களும் இருந்தபோதிலும், தனிப்பட்ட ரீதியில் அவருடன் நான் கொண்டிருந்த நட்பும் புரிந்துணர்வும் மிகவும் ஆழமானது.

அண்மையில் அவரை நேரில் சந்தித்து உரையாடிய தருணங்கள் இன்றும் எனது நினைவில் பசுமையாக உள்ளன. அந்தச் சந்திப்பின் போதும், வழமை போலவே மிகவும் உற்சாகத்துடனும், தமிழ் மக்களின் எதிர்காலம் மற்றும் சமகால அரசியல் நிலைமைகள் குறித்த ஆழ்ந்த சிந்தனையுடனும் அவர் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
தாம் கொண்ட கொள்கையில் எவ்விதத் தளர்வுமின்றி, துணிச்சலுடன் குரல் கொடுக்கும் அவரது பண்பு என்றும் போற்றுதற்குரியது. அன்னாரது அரசியல் பயணம் மிகவும் நீண்டதும் போராட்டங்கள் நிறைந்ததுமாகும்.
ஆரம்பகாலப் போராட்டக் களத்திலிருந்து ஜனநாயக அரசியல் நீரோட்டம் வரை, தமது மக்களின் குரலாக ஒலிப்பதற்கு அவர் ஒருபோதும் தயங்கியதில்லை.
வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்
நாடாளுமன்ற உறுப்பினராகவும், வடமாகாண சபை உறுப்பினராகவும், இறுதிவரை வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளராகவும் அவர் ஆற்றிய மக்கள் பணிகள் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். விமர்சனங்களுக்கு அஞ்சாமல், தாம் சரி என நம்பிய விடயங்களுக்காக இறுதிவரை உறுதியுடன் நின்ற ஒரு துணிச்சலான ஆளுமையை இன்று நாம் இழந்து நிற்கின்றோம்.

அன்னாரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், வல்வெட்டித்துறை மக்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்னாரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன் இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |