நீதிமன்றில் முன்னிலையான நாமல் : சிஐடிக்கு நீதிபதியின் அதிரடி உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த 'க்ரிஷ்' பரிவர்த்தனை வழக்கில் சாட்சிகளாகப் பெயரிடப்பட்ட இரண்டு இந்தியக் குடிமக்களுக்கு அழைப்பாணைகள் வழங்கப்பட்டிருந்தனவா என்று இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் விசாரித்து, எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி நீதிமன்றத்துக்கு அறிவிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
மேலும், இவ்விடயம் குறித்து ஜனவரி 18 அன்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (16) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சமர்ப்பிப்புகளைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதி அபர்ண சுவண்டுருகொட இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
நீதிமன்றில் முன்னிலை
தற்போது விளக்கமறியலில் உள்ள பிரதிவாதியான நாமல் ராஜபக்சவும் விசாரணையின்போது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்தியாவைச் சேர்ந்த 'க்ரிஷ்' நிறுவனத்திடமிருந்து இலங்கையில் ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதற்காக என்று கூறி சுமார் 70 மில்லியன் ரூபாய் பணத்தைப் பெற்று, அதனைத் தவறாகப் பயன்படுத்தியதாக அல்லது முறைகேடு செய்ததாகச் சட்டமா அதிபரால் நாமல் ராஜபக்சவுக்கு எதிராகப் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்குத் தொடரப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |