தமிழ் மக்களை நாம் புறக்கணிக்க போவதில்லை : மே தினக் கூட்டத்தில் அநுர வெளிப்படை
தமிழ் மக்கள் பாரம்பரியமான அரசியல் தரப்பினரை முழுமையாக புறக்கணித்து எம்மை தெரிவு செய்துள்ளார்கள். தமிழ் மக்களை நாங்கள் புறக்கணிக்க போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
கொழும்பு காலி முகத்திடலில் (Galle Face Green) நேற்று (01.05.2025) நடைபெற்ற மே தின நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “நாட்டினதும், நாட்டு மக்களினதும் எதிர்காலத்தை முன்னிலைப்படுத்தியதாக தேசிய மக்கள் சக்தி செயற்படுகிறது. ஏனைய அரசியல் கட்சிகள் சூன்யமாக்கப்பட்டுள்ளன.
அரசியல் அதிகாரம்
அரசியல் அதிகாரம் குடும்ப அலகில் இருந்தும், பரம்பரை அலகில் இருந்தும் நீக்கப்பட்டதை தொடர்ந்து இன்று பல அரசியல் தரப்பினரது அழுகுரல் கேட்கிறது.
நாட்டு மக்கள் கடந்த ஆண்டு நடைபெற்ற அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானத்தை எடுத்து ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள். மக்களின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் இன்று ஒன்றிணைந்துள்ளார்கள்.
கடந்த மார்ச் மாதம் அரசாங்கம் வீழ்ச்சியடையும் என்றார்கள் தற்போது ஆகஸ்ட், டிசெம்பர் என்று குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.
தோல்வி மற்றும் அச்சத்தின் வெளிப்பாடே இதுவாகும். ஆகவே அரசாங்கத்துக்கு பாரியதொரு சவால் ஏதும் கிடையாது. சூன்யமாக்கப்பட்டுள்ள தரப்பினர் மாத்திரமே ஒன்றிணைந்துள்ளார்கள்.
பொருளாதார மீட்சி
இந்த நாட்டை எம்மால் கட்டியெழுப்ப முடியும். மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை நாங்கள் நிச்சயம் பாதுகாப்போம்.மக்களின் நம்பிக்கை என்ற பாரதூரமான பலம் எம்மிடம் உள்ளது.
வங்குரோத்து நிலையடைந்த நாட்டையும், சகல வழிகளிலும் பலவீனமடைந்த அரச நிர்வாக கட்டமைப்பையே நாங்கள் பொறுப்பேற்றோம். ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்துக்குள் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, அரச நிர்வாக கட்டமைப்பை வினைத்திறனாக்கியுள்ளோம்.
நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் தான் ஆறு மாத காலத்தில் பொருளாதார மீட்சி குறித்து கேள்வியெழுப்புகிறார்கள்.
பொருளாதார மீட்சிக்கான பொறுப்பை நாங்கள் மறக்கவில்லை. பிற தரப்புக்கு கையளிக்க போவதுமில்லை. நிலையான பொருளாதார மீட்சிக்கான அடித்தளமிட்டுள்ளோம்.
தமிழ் மக்கள்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் எம்மீது முழுமையான நம்பிக்கை கொண்டு முழுமையான ஆதரவளித்துள்ளார்கள். தமிழ் மக்கள் பாரம்பரியமான அரசியல் தரப்பினரை முழுமையாக புறக்கணித்துள்ளார்கள்.
ஆகவே தமிழ் மக்களை நாங்கள் புறக்கணிக்க போவதில்லை. அவர்களின் அரசியல், மொழி மற்றும் பாரம்பரிய காணி உரிமை, சுதந்திரமாக வாழும் உரிமை மற்றும் அடிப்படை உரிமைகளையும் நாங்கள் உறுதிப்படுத்துவோம்.
ஆகவே இதனை செய்யாமல் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. தேசிய நல்லிணக்கம் பொருளாதார மீட்சிக்கான சிறந்த வழிகோலாகும்.” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
