15 ஆம் திகதி வரை இடியுடன் கூடிய மழை..! பொதுமக்களுக்கு எச்சரிக்கை
மேற்காவுகைச் செயன்முறையின் காரணமாக எதிர்வரும் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா கூறியுள்ளார்.
மாலை (குறிப்பாக 2.00 மணிக்கு பின்னர்) அல்லது காலை (9.00 மணிக்கு முன்னர்) வேளையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அவர் கூறுகிறார்.
இந்த மழை மேற்காவுகைச் செயற்பாட்டின் காரணமாக உருவாகும் மழை என்பதனால் இடிமின்னலுடன் இணைந்ததாகவே இம்மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கை
இதேவேளை, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி நுவரெலியா காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இடியுடன் மழை பெய்யும் வேளையில் கடுமையான காற்று வீசக்கூடும் என்பதோடு மின்னல் தாக்குவதற்கான சாத்தியம் உள்ளதாகவும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து பொது மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.