நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்றதற்காக 5 லட்சம் அபராதம்
அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசியை விற்பனை செய்த வெலிமடையிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசியை 260 ரூபாவுக்கு விற்பனை செய்தமைக்காக குறித்த பல்பொருள் அங்காடிக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபையால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை கிலோகிராமுக்கு 255 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதனைவிட 5 ரூபா அதிகமாக விற்பனை செய்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை
கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் திகதி, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பதுளை மாவட்ட அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது இந்த விதிமீறல் கண்டறியப்பட்டுள்ளது.

இதன்போது, அதிகாரசபையின் விசாரணை அதிகாரி ஒருவர், இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கீரி சம்பா (GR 11) அரிசியை 260 ரூபாவுக்கு கொள்வனவு செய்துள்ளார்.
இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி விற்பனை செய்தமை உறுதிப்படுத்தப்பட்டது.
அத்தியாவசியப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்தவும், நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கவும் நாடளாவிய ரீதியில் சோதனை மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
எனவே, பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தல் உள்ளிட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட மீறல்கள் தொடர்பில் பொதுமக்கள் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடுகளைத் தெரிவிக்குமாறும் அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |