சர்வதேசத்தை வெற்றிகொள்ள என்ன வழி? அரசுக்கு ஆலோசனை
நிலையான கொள்கை இல்லாத அரசாங்கத்தினால் ஒருபோதும் சர்வதேச சமூகத்தின் மனங்களை வெற்றிகொள்ள முடியாது எனவும், பயங்கரவாத தடை சட்டத்தை மாற்றியமைத்து எதுவும் நடக்கப்போவதில்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், 20ஆவது திருத்தத்தை மாற்றியமைத்து, ஆணைக்குழுக்கள் நிறுவனங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல (Lakshman Kiriella) வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், நிதிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“20ஆவது திருத்தம் மாற்றியமைக்கப்பட வேண்டும். 20ஆவது திருத்தத்தின் ஊடாக அனைத்து ஆணைக்குழுக்களும் நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் செயற்படுகின்றன.
புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசதலைவர் அழைப்பு விடுத்துள்ளமை நல்ல விடயம். தமிழ் மக்களுடனும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடனும் ஒரு பொது இணக்கப்பாட்டிற்கு வரமுடியும் என்றால் எமக்கும் அது மகிழ்ச்சியே. அதற்கு முழுமையான ஒத்துழைப்புகளை நாம் வழங்குவோம்.
அதற்கு முன்னதாக எமது நாட்டின் மனித உரிமைகள், ஜனநாயகம், ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்த வேண்டும்.
சரியாக செயற்படுவதாக நாம் அல்ல - சர்வதேசம் எமக்கு சான்றளிக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தோல்வியடைந்துள்ளோம், ஜிஎஸ்பி பிளஸ் கிடைக்குமா எனத் தெரியவில்லை. ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் நாட்டில் இருக்கின்ற நிலையில்,
ஊடகவியலாளர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்படுகின்றனர். சந்தர்ப்பவாத அரசியலை செய்பவர்களால் சர்வதேசத்தை வெற்றிகொள்ள முடியாது. இவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் அவர்கள் நன்கு அறிவார்கள்” என்றார்.