இஸ்ரேல் பிரதமரின் மகன் எங்கே...! வெடித்தது சர்ச்சை
இஸ்ரேலில் போர் இடம்பெற்றுவரும் நிலையில், இஸ்ரேல் பிரதமரின் மகன் எங்கே இருக்கிறார் என்ற கேள்விதான் அந்நாட்டில் போரை தாண்டி பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
நாட்டின் இளைஞர்கள் தங்கள் குடும்பங்களை மறந்து போரில் ஈடுபட்டுவரும் நிலையில் நெதன்யாகுவின் மகன் யாயிர் அமெரிக்காவின் மியாமி கடற்கரையில் பொழுதை கழித்து வருவதாக இஸ்ரேலிய ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன.
யாயிர் சமீபத்தில் மியாமி கடற்கரையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இதையடுத்தே அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
போர் சூழலிலும் நாடு திரும்பாமல்
நெதன்யாகுவின் மூன்றாவது மனைவி சாராவிற்கு பிறந்தவர் யாயிர். 32 வயதுடைய இவர், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அமெரிக்காவிற்கு சென்றார். அமெரிக்காவின் புளோரிடாவுக்கு சென்ற அவர், போர் சூழலிலும் நாடு திரும்பாமல் இருந்து வருகிறார்.
இதையடுத்து 'யாயிர் எங்கே' இஸ்ரேலிய ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது. இஸ்ரேலுக்காக போரில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர் ஒருவர் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்,
'யுத்த களத்தில் நாங்கள் முன் வரிசையில் இருக்கும் போது யாயிர் மியாமி கடற்கரையில் உல்லாசம் அனுபவித்து வருகிறார். இஸ்ரேலின் இந்த நிலைக்கு காரணமானவர்கள் நாங்கள் அல்ல. ஆனாலும், நாங்கள் குடும்பம், வேலை என அனைத்தையும் விட்டு போரில் ஈடுபட்டுள்ளோம்.' என தெரிவித்துள்ளார்.
நெருக்கடியான நேரத்தில்
காசா எல்லையில் போரில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரர் தெரிவிக்கையில், 'நான் வேறொரு பணி செய்துகொண்டிருந்தேன். ஆனால், குடும்பம், வேலையை விட்டுவிட்டு இந்த நெருக்கடியான நேரத்தில் எனது நாட்டு மக்களை கைவிடக்கூடாது என்பதற்காக போரில் ஈடுபட்டுள்ளேன். ஆனால், பிரதமரின் மகன் எங்கே... அவர் ஏன் இஸ்ரேலில் இல்லை? இஸ்ரேலியர்களாகிய நாங்கள் ஒருங்கிணைந்து இருக்க வேண்டிய நேரமிது. பிரதமரின் மகன் உட்பட ஒவ்வொருவரும் இப்போது இங்கே போர் புரிய வேண்டும்' என தெரிவித்தார்.
பெஞ்சமின் நெதன்யாகுவின் மகன் யாயிர், சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். குறிப்பாக சமூக ஊடகங்களில் இஸ்லாமிய வெறுப்புகளை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வது அவரது வழக்கமாக இருந்தது.
2018ல் அனைத்து முஸ்லிம்களும் வெளியேறும் வரை இஸ்ரேலில் அமைதி இருக்காது என்று யாயிர் பதிவிட்டதும், பின்னர் அவரது பேஸ்புக் கணக்கு 24 மணி நேரம் முடக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஒருமுறை தனது தந்தையும் பிரதமருமான பெஞ்சமின் நெதன்யாகு, பிசினஸ்மேனுக்கு உதவுவதற்காக 20 பில்லியன் டொலர் எரிவாயு ஒப்பந்தத்தில் முறைகேடு செய்தார் என யாயிர் வீடியோ ஒன்றில் சிக்கிக்கொண்டார். இதையடுத்து யாயிரை விமர்சித்து நெதன்யாகு அறிக்கை வெளியிட்டதும் அதன்பின் யாயிர் மன்னிப்பு கேட்டதும் பரபரப்பாக பேசப்பட்டது.
சில மாதங்களுக்கு முன், இஸ்ரேல் எதிர்க்கட்சித் தலைவர் பென்னி காண்ட்ஸ் ஒரு பெண்ணுடன் உறவில் இருப்பதாக சொல்லி சர்ச்சையாக அந்த வழக்கில் யாயிருக்கு 34,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர் சர்ச்சைகளை அடுத்தே நெதன்யாகு மற்றும் அவரது மனைவி வற்புறுத்தலால் யாயிர் அமெரிக்கா சென்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.