சீனாவிடம் கடன் வாங்கி சிக்கி திணறிய நாடுகள்..!
உலகில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நாடான சீனா, பட்டுப்பாதை திட்டத்தின் மூலம் அதிக கடன் வலைகளை விரித்து பல நாடுகளை அடிமைப்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.
உலகில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் வறுமைப்பட்ட மற்றும் வருமானம் குறைந்த நாடுகளை இலக்காக வைத்து இந்த திட்டத்தை சீனா முன்னெடுத்துவருகின்றது.
அந்தவகையில், குறித்த நாடுகள் கடன்களை மீள அடைக்கமுடியாததை நன்கு அறிந்த சீனா, அந்தநாடுகளை அடிமைப்படுத்தும் நோக்கில் கடன்களை வழங்கி தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில், இந்த பட்டுப்பாதை திட்டத்தில் பங்குபெறும் நாடுகளுக்கு துறைமுகம், ரயில் மற்றும் நில உள்கட்டமைப்புகளை நிர்மாணிக்க நிதியளிக்கின்ற வகையில் சீனா அதிக கடன்களை வழங்கியுள்ளது.
கடன்பொறிக்குள் சிக்கிக்கொண்ட நாடுகள்
இதற்கமைய, சீனாவிற்குக் கடனில் உள்ள நாடுகள் பெரும்பாலும் ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளநிலையில், மத்திய ஆசியா, தென்கிழக்கு ஆசியாப் பகுதிகளிலும் சீனாவின் கடன் பரப்புக்கள் பரந்துள்ளன.
சீனாவிடம் இருந்து பெரிய கடன் சுமைகளைக் கொண்ட நாடுகளாக ஜிபூட்டி மற்றும் அங்கோலா விளங்குகின்றன. அதேவேளை, ஆபிரிக்க நாடான ஜிபூட்டியில் வல்லரசு நாடுகளை அச்சுறுத்தும் வகையில் சீனா கடற்படைத்தளத்தினை அமைத்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சீனாவின் கடன்பொறிக்குள் சிக்கிக்கொண்ட நாடுகளின் விபரங்கள் குறித்து உலக வங்கி தரவுகளை வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், 2020 ஆம் ஆண்டின் இறுதியில் தரவுகள் கிடைத்த 97 நாடுகளில், பாகிஸ்தான் சீனாவிற்கான 77.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுக் கடன்களை கொண்டுள்ளது.
சீனாவின் மொத்த கடனுதவிகள்
அதேவேளை, அங்கோலா 36.3 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் எத்தியோப்பியா 7.9 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் கென்யா 7.4 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் சீனாவிற்கு மிகப்பெரிய கடன்களை வைத்திருந்தன.
இந்நிலையில், இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்திருக்கும் இலங்கையானது 6.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சீனாவிற்கான வெளிநாட்டுக் கடனாக கொண்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு சீனா அதிகாரப்பூர்வமாக 170 பில்லியன் டொலர்களை கடனாக வழங்கியது. இந்த கடனுதவியானது 2014 ஆண்டு இல் 40 பில்லியன் டொலர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டு தசாப்தங்களில் கடனைத் திருப்பிச் செலுத்தாத முதல் ஆசிய நாடாக சீனாவின் மிகப் பெரிய கடனாளிகளில் ஒன்றாக இலங்கையும் இருந்தமை சுட்டிக்காட்டதக்கது.
சீனாவின் ஆக்கிரமிப்பு
தென்னாசியாவில் இந்தியாவிற்கு அருகில் உள்ள நாடான இலங்கையின் வெளிநாட்டு கடன்தொகையின் அரைப்பங்கை சீனா வழங்கியுள்ளது. இந்த கடன்தொகையால் இலங்கையிலும் சீனா தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது.
கடனை திருப்பி செலுத்த முடியாத இக்கட்டு நிலையில் இருக்கிறது இல்லை. அதேவேளை, கொழும்பு துறைமுக நகரம், மத்தள விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்றவற்றை சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
எவ்வாறாயினும் இலங்கை மீதான சீனாவின் ஆக்கிரமிப்பை இந்தியா மற்றும் அமெரிக்கா கடுமையாக எச்சரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

