ராஜராஜ சோழன் எந்த மதம் - தமிழகத்தில் வெடித்தது சர்ச்சை
ராஜராஜ சோழன் எந்த மதத்தை சேர்ந்தவர்
ராஜராஜ சோழன் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பது தொடர்பில் தமிழகத்தில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.இது தொடர்பில் திரைக்கலைஞர்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை விவாதங்களை நடத்தி வருகின்றனர்.
ராஜராஜ சோழன் இந்து இல்லையென சொல்பவர்கள் முட்டாள், காட்டுமிராண்டியாக இருப்பார்கள் என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து நாராயணன் திருப்பதி தனது ட்விட்டரில் கூறுகையில், ராஜராஜ சோழன் இந்து இல்லை என்று சொல்பவன் முட்டாள்! நம்புகிறவன் காட்டுமிராண்டி! பரப்புவன் அயோக்கியன்! என தெரிவித்துள்ளார்.
ராஜ ராஜ சோழனுக்கு இந்து அடையாளம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசிய கருத்துக்குத்தான் பாஜகவினரும் இந்து அமைப்பினரும் எதிர்க்குரல் எழுப்பி வருகிறார்கள். அந்த விழாவில் வெற்றிமாறன் பேசுகையில், திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துவது போல் ராஜ ராஜ சோழனுக்கு இந்து அடையாளம் கொடுக்கிறார்கள் என விமர்சித்திருந்தார்.
ராஜா கடும் விமர்சனம்
இதற்கு வெற்றிமாறனுக்கு எதிராகவும் ஆதரவாகவும் பலர் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள். இதுகுறித்து எச் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சிவன் கோயில் கட்டிய மாமன்னன் என்ன இஸ்லாமியரா அல்லது கிறிஸ்தவரா இல்லை பௌத்தரா என்பதை அந்த தற்குறியே சொல்லட்டும் என வெற்றிமாறனை கடுமையாக விமர்சித்திருந்தார்.
ஆதரவுக்கரம் நீட்டிய சீமான்
எனினும் நாம் தமிழர் கட்சியின் சீமான், வெற்றி மாறனுக்கு ஆதரவாக பேசியிருந்தார். அவர் கூறுகையில் ராஜராஜ சோழனை இந்து மன்னர் என கூறுவது எல்லாம் வேடிக்கையாக இருக்கிறது. இது வள்ளுவருக்கு காவி பூசியது போல்தான். அந்த காலத்தில் நாடும் கிடையாது, மதமும் கிடையாது. அவர் சிவனை வழிபட்ட சைவ மரபினர் என்பது உலகிற்கே தெரியும் என தெரிவித்தார்.
ஆங்கிலேயர் வைத்த பெயர்
இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த இயக்குநர் பேரரசு கூறுகையில் ராஜ ராஜ சோழன் இந்து இல்லை என்றால் அவர் இஸ்லாமியரா, இல்லை கிறிஸ்தவரா. ஆங்கிலேயர் நம் நாட்டை ஆட்சி செய்த போது இந்தியா மாகாணங்களாக பிரிந்து கிடந்தது. அதில் மாற்றம் ஏற்பட்டு ஒன்றாக இணைத்து இன்று இந்தியா என சொல்கிறார்கள்.
இந்து மதம் ஒரு காலத்தில் சைவம், வைணவம் என பல மதங்களாக சிதறியிருந்தது. அதை அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஆங்கிலேயர் இந்து மதம் என ஒரு பெயர் வைத்தார்கள். நீங்கள் இந்துக்கள் இல்லை என்றால் ஏன் இந்துக்கள் குறித்து பேசுகறீர்கள். சாமி கும்புடுறவங்க மட்டும் இதைப் பற்றி பேசட்டும் என கடுமையாக பேரரசு விமர்சித்துள்ளார்.