இலங்கையில் கொரோனா தொற்ற காரணம் யார்? வெளியானது தகவல்
சுற்றுலாப் பயணிகளுக்காக நாடுமீண்டும் திறக்கப்பட்டதால் கொவிட் தொற்று நாட்டில் பரவியது என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்கா தெரிவித்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,
நாடு உத்தியோகபூர்வமாகத் திறக்கப்பட்டதிலிருந்து 21,915 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் என்றும் அவர்களில் 220 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அவர் தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட 220 சுற்றுலாப் பயணிகளில் எவரும் இலங்கை சமூகத்துடன் தொடர்பு கொள்ளவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 220 சுற்றுலாப் பயணிகளில், 150 பேர் குணமடைந்துள்ளனர், எஞ்சியோர் சுகாதார அதிகாரிகளின் கடுமையான மேற்பார்வையின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சுகாதாரத்துறையின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் பேரில் சுற்றுலாத் துறையை புதுப்பிக்க அரசாங்கம் செயல்பட்டு வருவதால் இதுபோன்ற அற்ப அரசியல் முட்டாள்தனங்களால் மக்கள் ஏமாற வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.