பொய்யுரைக்கும் அரசு - ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி யார்...! அநுரவிற்கு உச்சக்கட்ட அழுத்தம்
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகளை 2025 ஏப்ரல் 21 ஆம் திகதி வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) உறுதியளித்திருந்த போதிலும், அவ்வாறு எவ்வித அறிவிப்பும் செய்யப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மக்களை ஏமாற்றி, சாக்குப்போக்குகளை கூறுவதாகவும், தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மட்டுமே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
திஸ்ஸமஹாராமவில் நேற்று (21) நடந்த மக்கள் சந்திப்பில் சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டார்.
மின் கட்டண குறைப்பு
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “பொய்யும் பாசாங்குத்தனமும் கொண்ட திசைகாட்டி அரசாங்கம், மின் கட்டணத்தில் 33% குறைப்பு வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியுள்ளது.
பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலையீட்டால் 20% குறைப்பு மட்டுமே நடந்தது, எஞ்சிய 13% குறைப்பை உடனடியாக செய்ய வேண்டும்.
மேலும், உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை நிறுத்துவதாக ஜனாதிபதி கூறுவது சட்டவிரோதமானது, உள்ளூராட்சி சட்டங்களைப் புரிந்து கொள்ளாமல் முட்டாள்தனமாகப் பேசுகின்றார்.
பொருளாதார வளர்ச்சி
2028 முதல் வெளிநாட்டுக் கடன்களை அடைக்க 5%க்கு மேல் பொருளாதார வளர்ச்சி தேவை, இதற்கு தொழிற்சாலைகள், சுற்றுலா, ஏற்றுமதி ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும், ஆனால் அரசாங்கத்திடம் திட்டமில்லை.
அரசாங்கத்தின் பொய்கள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளை மக்கள் தீர்மானிக்க வேண்டும், புதிய பொய்களுடன் மக்களை ஏமாற்றுவதை நிறுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
