சீன மாநாட்டில் ஜின்பிங் ஆதிக்கம்..! உள்ளே புகுந்த அதிகாரிகள் - முன்னாள் அதிபர் வெளியேற்றம்
சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங், தனக்குரிய ஆதரவு முகங்கள் மற்றும் மேலதிக அதிகாரத்துவத்துடன், மூன்றாவது தவணை ஆட்சியை தொடரவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்குரிய நகர்வுகளின் அடிப்படையில் பிரதமர் லீ கெகியாங் மற்றும் துணைப் பிரதமர்களில் ஒருவரான வாங் யாங் ஆகியோர் சீன கொம்யூனிஸ்ற் கட்சியின் உயர்மட்ட அமைப்புக்கு மீண்டும் தெரிவு செய்யப்படாமல் ஓய்வுக்கு அனுப்பட்டுள்ளனர்.
மத்திய குழுவை தெரிவு
ஒரு வார காலம் நீடித்த கொம்யூனிஸ்ட் கட்சி இன்று 200 உறுப்பினர்களைக் கொண்ட தனது புதிய மத்தியக் குழுவை தெரிவுசெய்தபோது, அதில் பிரதமர் லீ கெகியாங் மற்றும் துணைப் பிரதமர்களில் ஒருவரான வாங் யாங் ஆகியோருக்கு இடமளிக்கப்படவில்லை.
இன்று தெரிவுசெய்யபட்ட இந்தக்குழு தான் நாளை புதிய உயர்மட்டத் தலைவர்களைத் தெரிவுசெய்யவுள்ளதால் இன்றைய இந்த நகர்வு மூன்றாவது தவணை ஆட்சிக்கு திட்டமிட்டுள்ள அதிபர் ஜி ஜின்பிங்குக்கு முக்கியமானதாகும்.
இன்று சீனாவின் உயர்மட்ட ஆளும் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட லீ கெகியாங் மற்றும் வாங் யாங் - இருவருமே புதிய மத்திய குழுவில் சேர்க்கப்படவில்லையென்பதால் அவர்கள் முழு ஓய்வுக்கு சென்றுள்ளனர்.
வாழ்நாள் ஆட்சியாளர்
புதிய மத்திய குழு உறுப்பினர்கள் பட்டியலில் ஜி ஜின்பிங்கின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதால் அவர் நாளை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நகர்வு நாளை நடந்தால் 69 வயதான ஜி ஜின்பிங் வாழ்நாள் ஆட்சியாளராக வரக்கூடும்.
இன்று நடந்த நிறைவு விழாவில், முன்னாள் உயர்மட்ட தலைவர் ஹ ஜின்டாவோ எதிர்பாராதவிதமாக நிகழ்விலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
