மகிந்த திருப்பதிக்கு சென்ற ஜெட் விமானம் யாருடையது? தொடரும் சர்ச்சை
இந்தியாவில் உள்ள திருப்பதி கோவிலுக்கு தரிசனம் செய்ய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ(Mahinda Rajapaksa) பயணித்த தனிப்பட்ட விமானத்தின் அடையாளத்தை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க(Vidura Wickremanayake) தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் எந்த விமானத்தில் ஏறுவதும் பிரச்சனை இல்லை என்றாலும், யாரிடம் இருந்து, எங்கிருந்து வந்தாலும் மக்களுக்குச் சொன்னால் சந்தேகம் வராது என்றும் அவர் கூறினார்.
வார இறுதி நாளிதழ் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
‘இப்போது இங்கு பிரச்சனை பயணம் அல்ல. விமானம் யாருடையது? எனக் கேட்பதே ஆகும்.இது தொடர்பில் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.
ஆனால் யாருக்கும் உறுதியாக தெரியவில்லை. உண்மையில், இவை சந்தேகத்திற்குரிய விஷயங்கள்.
2015ல் ஏற்பட்ட தோல்விக்கும் இது போன்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்ததே காரணமாகும். இப்போதும் இதுபோன்ற சந்தேகங்கள் எழுகின்றன. இந்த ஜெட் விமானமும் ஒரு சந்தேகம்.
எனவே இது தொடர்பில் அரசாங்கமோ அல்லது யாரேனும் மக்களுக்கு உண்மையைக் கூற வேண்டும். இவற்றை ஏன் சொல்லக்கூடாது. அல்லது ஏன் என்று சொல்ல முடியாது'எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.