கிரீன்லாந்தை கையகப்படுத்த துடிக்கும் ட்ரம்ப் - நகர்த்தப்படும் காய்கள்
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப்பின் (Donald Trump) கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளாகி விமர்சனங்களுக்குள்ளாவதை அண்மைய நாட்களில் அதிகளவில் காணமுடிகின்றது. அந்த வகையில் தற்போது கிரீன்லாந்து (Greenland) பேசுபொருளாக மாறியிருக்கிறது.
கிரீன்லாந்தையோ அல்லது பனாமா கால்வாயையோ கையகப்படுத்துவதற்கு இராணுவம் அல்லது பொருளாதார சக்தியைப் பயன்படுத்துவதை நிராகரிப்பீர்களா என செய்தியாளர்கள் மாநாட்டில் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, பொருளாதார பாதுகாப்பிற்கு எங்களுக்கு அவை தேவை என்று கூறிய ட்ரம்ப் சீன மற்றும் ரஷ்ய கப்பல்களைக் கண்காணிப்பதற்கான இராணுவ முயற்சிகளுக்கு தீவு முக்கியமானது என்றும் கூறினார்.
கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை
கிரீன்லாந்து பனிப்போருக்குப் பின்னர் அமெரிக்க ரேடார் தளத்தின் தாயகமாக இருந்து வருவதுடன் வோஷிங்டனுக்கு நீண்ட காலமாக மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் காணப்படுகின்றது என தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்காவின் நீண்ட கால நட்பு நாடான டென்மார்க், கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை என்றும் குடிமக்களுக்கு சொந்தமானது என்றும் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது.
இந்நிலையில் கிரீன்லாந்து கிரீன்லாண்டர்களுக்கு சொந்தமானது என டென்மார்க் பிரதமர் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் மக்களால் மட்டுமே அதன் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். “நாங்கள் விற்பனைக்கு இல்லை, விற்கப்படவும் மாட்டோம்” என்றும் அவர் அழுத்தமாக கூறியிருக்கிறார்.
உலகளாவிய சக்திகள்
கீரின்லாந்தை கண்வைத்த ட்ரம்ப் அரிய கனிமங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் கொண்டமைந்துள்ளது கீரின்லாந்து. அமெரிக்கா, கிரீன்லாந்தில் பிட்டுஃப்ஃபிக் விண்வெளி தளத்தை நிர்வகிக்கிறது.
மேலும் ஆர்டிக் வட்டத்தில் உலகளாவிய சக்திகள் தங்கள் வரம்பை விரிவுபடுத்த முயற்சிப்பதால் வர்த்தகத்திற்கான ஒரு முக்கிய இடமாகவும் அது பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ரஷ்யா, இப்பகுதியை ஒரு பாதுகாப்பு உத்தியாகப் பார்க்கிறது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாகத் தனது முதல் பதவிக் காலத்தில், கிரீன்லாந்தை வாங்கும் எண்ணத்தை ட்ரம்ப் முன்மொழிந்தார். ஆனால் அது நிறைவேறவில்லை. அவரது அண்மைய கருத்து தற்போதும் கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுக்குள் கொண்டு வருவதற்கே அவர் விரும்புகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |