தேர்தலில் இருந்து விலகியது ஏன்..! மனம் திறந்தார் பைடன்
அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து ஜனாதிபதி ஜோ பைடன்(joe biden) முதல்முறையாக விளக்கம் அளித்துள்ளார்.
போட்டியிலிருந்து விலகிய பின்னர் நாட்டு மக்களுக்கு முதல்முறையாக புதன்கிழமை உரையாற்றியபோது, “இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு கொடுப்பதற்கான நேரம் இது, அவர்களுக்கு வழிவிடுவதே சிறந்தது என்று நான் முடிவு செய்தேன்.
நமது தேசத்தை ஒன்றிணைக்க அதுவே சரியான வழியாகும் என்பதற்காக விலகியதாக தெரிவித்தார்.
அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் ஜனநாயகத்துக்கு மீண்டும் அச்சுறுத்தல்
தற்போது நாட்டின் ஜனநாயகத்துக்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது ஜனநாயகத்தை காப்பதற்காகவே அதிபர் தேர்தலில் இருந்து விலகியுள்ளேன். பதவியை நான் மதித்தாலும், அதைவிட நாட்டை நேசிக்கிறேன்.
அதிபராக அமெரிக்க மக்களுக்கு பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது மிகப் பெரிய கெளரவமாக கருதுகிறேன், ஆனால், ஜனநாயகத்தை பாதுகாப்பது பதவியைவிட முக்கியமானது. நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க மக்கள் ஒன்றுபட வேண்டும்.நாட்டையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு மக்களிடம் உள்ளது.
உலகின் தலைவிதியை தீர்மானிக்கக் கூடிய தேர்தல்
கமலா ஹாரிஸ்(kamala harris) மிகவும் அனுபவம் கொண்டவர், திறமையானவர். துணை அதிபராக அவரது செயல்பாடுகள் பாராட்டத்தக்கது. தற்போது அமெரிக்காவை வழிநடத்த அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தாண்டு நடைபெறும் அதிபர் தேர்தல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. அடுத்த பல ஆண்டுகள் அமெரிக்கா மற்றும் உலகின் தலைவிதியை தீர்மானிக்கக் கூடிய தேர்தல். நேர்மை, கண்ணியம், நீதி மற்றும் ஜனநாயகம் ஆகியற்றை அமெரிக்க மக்கள் தேர்வு செய்வார்கள் என்று நம்புகிறேன்.
மக்கள் சரியான முடிவு எடுக்க வேண்டும். மீதமுள்ள 6 மாத காலம் அதிபராக எனது பணியை தொடர்வேன்” எனத் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |