ரணில் ஏன் நாடாளுமன்றம் செல்கிறார்? வெளியானது விரிவான அறிவிப்பு
ஸ்ரீலங்காவை மிகப்பெரிய அழிவிலிருந்து மீட்டெடுப்பதற்காகவே முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்றத்திற்கு செல்ல முடிவு செய்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்காவை சர்வதேச சமுகத்துடன் ஒன்றிணைத்து செயலாற்றக்கூடிய, ஆசியப் பிராந்தியத்தில் இந்தியாவுடன் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய தலைமைத்துவமொன்று தற்போது எமது நாட்டிற்குத் தேவைப்படுகின்றது என அந்தக் கட்சி கூறியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன கலந்துகொண்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்று நடைபெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்திற்குள் அடுத்த வாரத்தில் பிரவேசிக்க உள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதுகுறித்து விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பில் உரையாற்றிய வஜிர அபேவர்தன, ஸ்ரீலங்கா தற்போது பல்வேறு விதமான அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சுமார் ஒருவருடத்திற்கும் அதிகமான காலம் எமது நாடும் ஏனைய உலகநாடுகள் அனர்த்த நிலையொன்றை எதிர்கொண்டுள்ளன.
அதேபோன்று வெள்ளப்பெருக்கு காரணமாக பலரும் உயிரிழந்திருக்கின்றார்கள். மேலும் கொழும்புத்துறைமுகத்திற்கு அமையில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலைத் தொடர்ந்து தற்போது மீன்பிடித்துறை, சுற்றுலாத்துறை என்பன பாரிய நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதுடன் வருமானத்திலும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது.
ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடாக கடந்த காலங்களில் தொடர்ச்சியாகக் கூறப்பட்டுவந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியதா என்பது குறித்து சந்தேகம் ஏற்படுகின்றது. நாட்டை முழுமையாக முடக்குமாறு சுகாதாரத்தரப்பினரால் கோரப்பட்ட போதிலும், அரசாங்கம் நாடளாவிய ரீதியில் அதிதீவிரப் பயணக்கட்டுப்பாடுகளையே விதித்தது.
இதனூடாக மனித உயிர்களைப் பாதுகாத்துக்கொள்ளமுடியும் என்று நாம் கருதவில்லை. மாறாக தற்போது தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகரித்துவருவதுடன் நாடு பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. இந்த நிலையில் ரணில் நாடாளுமன்றத்திற்குச் செல்லவேண்டும் என்பதே கடந்த 5 மாதகாலமாக கட்சியின் அனைத்துத்தரப்பினரதும் கோரிக்கையாகக் காணப்பட்டது.
அதன்படி அவரை நாடாளுமன்றம் அனுப்புவதற்கான தீர்மானம் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. எமது நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்கு அனுபவமும் செயற்திறனும் உள்ள, ஸ்ரீலங்காவை சர்வதேச சமுகத்துடன் ஒன்றிணைக்கக்கூடிய, ஸ்ரீலங்கா தொடர்பில் சிறந்த தெளிவைக்கொண்ட, ஆசியப்பிராந்தியத்தில் இந்தியாவுடன் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய அரசியல் தலைவரொருவரின் தேவை காணப்படுகின்றது. அந்த அனைத்துத்தகுதிகளும் ரணில் விக்கிரமசிங்கவிடம் காணப்படுகின்றது எனத் தெரிவித்தார்.