ட்ரம்பிற்கு கடிவாளம் போட்ட சவுதி: 'புராஜெக்ட் ஃப்ரீடம்' முடங்கிய பின்னணி
ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் அமெரிக்காவின் 'புராஜெக்ட் ஃப்ரீடம்' இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்ட 36 மணி நேரத்திலேயே நிறுத்தப்பட்டதன் பின்னணியில், சவுதி அரேபியாவுடனான மோதல் உள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிராந்திய நட்பு நாடுகளுடன் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக சமூக வலைதளத்தில் 'புராஜெக்ட் ஃப்ரீடம்' திட்டத்தை அறிவித்ததால் சவுதி தலைமை அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது.
சவுதியின் அறிவிப்பால் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட திண்டாட்டம்
ரியாத்திற்கு அருகிலுள்ள பிரின்ஸ் சுல்தான் விமானத் தளத்தை அமெரிக்க இராணுவம் பயன்படுத்த சவுதி தடை விதித்தது. அமெரிக்கப் போர் விமானங்கள் தங்களது வான்வெளியைப் பயன்படுத்தவும் அனுமதி மறுத்தது. பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் தூதரக ரீதியிலான அமைதி முயற்சிகளுக்கு மட்டுமே தாங்கள் ஆதரவளிப்பதாகச் சவுதி தரப்பு திட்டவட்டமாகத் தெரிவித்தது.

இராணுவ மொழியில் ABO (Access, Basing, and Overflight) எனப்படும் தளம், அணுகல் மற்றும் வான்வழிப் பயன்பாடு ஒரு நடவடிக்கைக்கு மிகவும் அவசியமானது.
திட்டத்தை நிறுத்திய ட்ரம்ப்
சவுதி மற்றும் ஜோர்தான் வான்வெளி அனுமதி மறுக்கப்பட்டதால், பாரசீக வளைகுடாவில் உள்ள கப்பல்களுக்கு வான் பாதுகாப்பு அளிப்பதில் அமெரிக்காவிற்குப் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாகவே, ட்ரம்ப் தனது திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் இடைக்காலத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் ட்ரம்ப் உள்ளார். அடுத்த வாரம் அவர் சீனா செல்வதற்கு முன்னதாகவே ஈரானுடன் ஒரு ஒப்பந்தம் எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |