சுதந்திரக் கட்சி அலுவலகத்திற்கு முன்னால் பதற்றம்: பதில் தலைவராக விஜேதாச ராஜபக்ச நியமனம்
இரண்டாம் இணைப்பு
சிறிலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்திற்கு முன்பாக கடும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக இன்று நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் விஜேதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) உள்ளிட்ட தரப்பினர் கட்சியின் அலுவலகத்திற்குள் செல்ல முற்பட்ட நிலையில் காவல்துறையினரால் தடை விதிக்கப்பட்டதை அடுத்தே இந்த பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக மருதானை காவல் நிலையத்தில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து அங்கு காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபால (Dushmantha Mithrapala) தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று குழு இன்றைய தினம் (21) கோட்டையிலுள்ள தனியார் விடுதியொன்றில் கூடியிருந்த போது, கட்சியின் நிறைவேற்றுக் குழுவினது ஏகமனதான தீர்மானத்துக்கமைய, விஜேதாச ராஜபக்ச பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்பட்டுவந்த முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன, தொடர்ந்தும் அந்த பதவியில் செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.
நிமல் சிறிபால டி சில்வா நியமனம்
எவ்வாறாயினும், அதன் பின்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை கட்சியின் அரசியல் குழு கடந்த 8 ஆம் திகதி நியமித்தது.
இந்த நிலையில், குறித்த நியமனம் சட்டத்திற்கு விரோதமானது என சிறிலங்கா சுதந்திர கட்சியின் பதில் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாரதி துஷ்மந்த மித்ரபால தெரிவித்திருந்தார்.
தலைவரின் பங்கேற்பு இல்லாமல் எந்த அரசியற் குழு கூட்டத்தையும் நடத்த முடியாது எனவும் தலைவரின் அறிவுறுத்தலின் பேரில் மட்டுமே கட்சி செயலாளர் அவ்வாறான கூட்டத்தை கூட்ட முடியும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
சந்திரிக்காவுடன் கலந்தாலோசனை
இதேவேளை, நேற்றைய தினம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளரினால் நடத்தப்பட்டதாக கூறப்படும் கூட்டம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் இணைந்து செயற்படும் குழுவினர் கலந்தாலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சட்டவிரோதமான அரசியல் குழுக் கூட்டமொன்று நேற்று இடம்பெற்றதாக அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன கட்சியின் தலைவர் பதவியை வகிப்பதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ள பின்னணியிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |