பண்டோரா ஆவணத்தில் அம்பலமான பெயர்கள்! நாடாளுமன்றத்தில் வெடித்தது சர்ச்சை
பண்டோரா ஆவணத்தில் பெயர் அம்பலமாகியிருக்கும் அரசியல்வாதிகளின் வங்கிக் கணக்கு சம்பந்தமாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாட்டுக்கு வெளிப்படுத்தவேண்டும் என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித ஹேரத் (Wijitha Herath) தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அரிசி விலையை அரசாங்கம் தீர்மானிக்கவில்லை. அரிசி ஆலை உரிமையாளர்களே அரிசி மற்றும் நெல்லின் விலையை தீர்மானிக்கின்றனர். விவசாயிகளுக்கு உரம் இல்லை.
மக்கள் அத்தியாவசிய பொருட்களை வரிசையில் இருந்தே பெற்றுக்கொள்ளவேண்டிய நிலையில் இருக்கின்றனர். மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம் நாட்டின் பெரும்பாலான மக்கள் நாளொன்றுக்கு 02 டொலர்களுக்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றனர்.
பெரும்பாலான மக்கள் அன்றாட செலவை ஈட்டிக்கொள்ள முடியாமல் இருக்கின்றனர்.
ஆனால் இவ்வாறான நிலையில் நாட்டில் தனவந்தர்கள் சிலர் கோடிக்கணக்கான கறுப்பு பணத்தில் பல்வேறு வியாபாரங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். பென்டோரா ஆவணம் இதனை உறுதிப்படுத்தியிருக்கின்றது.
பண்டோரா ஆவணத்தில் இதற்கு முன்னர் பல்வேறு தரப்பினரின் பெயர்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் இந்த முறையே முதல்தடவையாக இலங்கை அரசியல்வாதி ஒருவரின் பெயர் வெளிவந்திருக்கின்றது.
நிரூபமா ராஜபக்ஸ (Nirupama Rajapaksa) மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோரின் பெயரில் இருக்கும் நிறுவனம் தொடர்பில் அரசாங்கம் நாட்டுக்கு வெளிப்படுத்தவேண்டும் என்று நாடாளுமனறில் பகிரங்கமாக தெரிவித்தார்.