நல்லிணக்க முயற்சிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் - அமெரிக்காவுக்கு இலங்கை எடுத்துரைப்பு
அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானம் நல்லிணக்க முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தூதரக பொறுப்பதிகாரி மார்ட்டின் கெலி, இலங்கை வெளிவிவகார அமைச்சரை சந்தித்தவேளை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தை அமெரிக்கா கைவிடவேண்டும் என்ற முயற்சிகளுக்காக இலங்கை அரசாங்கம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவிப்பதற்காக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினை தொடர்புகொள்வதற்கான முயற்சிகளை வெளிவிவகார அமைச்சர் மேற்கொண்டுள்ளார்.
அத்துடன் தூதரக பொறுப்பதிகாரி மார்ட்டின் கெலி யை சந்தித்தவேளை அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தலையீட்டை அமைச்சர் தினேஷ் குணவர்தன கோரியுள்ளார்.
இதேவேளை கொவக்ஸ் திட்டத்தின் கீழ் தடுப்பூசிகளை பெறுவதற்காக தெரிவு செய்யப்பட்ட நாடுகளில் ஒன்று இலங்கை என்ற அமெரிக்க ஜனாதிபதியின் அறிவிப்பை வெளிவிவகார அமைச்சர் வரவேற்றுள்ளார்.