ஐ.எம்.எப் இன் கடனை விரைவில் பெற்றுக் கொள்ள சிறிலங்கா என்ன செய்ய வேண்டும்..! உலக வங்கி விளக்கம்
சிறிலங்கா அரசாங்கம் கடன் மறுசீரமைப்புக்களை விரைவுபடுத்துவதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை விரைவில் பெற்றுக் கொள்ள முடியுமென உலக வங்கி தெரிவித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி குறைவடைவதால் அதன் பாதகமான விளைவுகள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளை பாரியளவில் பாதிக்குமென ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து உரையாற்றிய உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் நம்பிக்கை
உலக நாடுகளில் வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரம் குறித்தும் அது தொடர்பான பிரச்சினைகளை குறித்தும் உலக வங்கி சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து அடுத்த மாதம் வாஷிங்டனில் விவாதமொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை, பாகிஸ்தான், எகிப்து உள்ளிட்ட பல நாடுகள் தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அது நாணய நிதியத்திலுள்ள கடன்களின் தொகையை அதிகரித்து புதியதொரு சாதனையை படைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கான கடன் வழங்குநர்கள் மற்றும் பங்குதாரர்களின் ஆதரவுடன் கடன்களை மறுசீரமைத்து இலங்கையை மீள கட்டியெழுப்ப முடியுமென சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
