ஒருமுறை அல்ல பத்து முறை யோசிக்க வேண்டும் மைத்திரி -சஜித் தரப்பு வெளியிட்ட அறிவிப்பு
முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவது தொடர்பில் ஒரு தடவை அல்ல பத்து தடவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (மார்ச் 04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அந்த கட்சியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஒருமுறை அல்ல, பத்து முறை யோசித்து யோசித்து முடிவெடுப்போம், தூய்மையான மக்களுடன் தான் இந்த பயணம் செல்கிறோம், சிறந்த அணியை மக்கள் தேர்வு செய்வார்கள் என்றார்.
"அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று அரசாங்கத்தின் ஒரு பகுதியே இன்று கூறுகிறது. அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி நாட்டைக் காப்பாற்ற விரும்புபவர்களை எங்களுடன் சேருமாறு அழைக்கிறோம்.அனைத்து விவாதங்களையும் வெளியிட முடியாது," என்று அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு கொழும்பில் ‘அரங்க அலை’ என்ற நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரஞ்சித் மத்துமபண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
