எந்த அரசியல்வாதிகளையும் என்னை சந்திக்க அனுமதிக்க மாட்டேன் - ஸ்ரீ சுமங்கல தேரர்
அரசியல்வாதிகளை சந்திக்க அனுமதிக்கப்போவதில்லை என மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாட்டிலுள்ள மூன்று பௌத்த பீடங்களின் பிரதான பீடாதிபதிகளினால் சில பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன.
எனினும் இதுவரையிலும் எந்தவொரு பொறுப்பான நபரும் இப் பிரேரணைகளுக்கு பதிலளிக்காத நிலையிலேயே வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் இத் தீர்மானத்தை எடுத்துள்ளார்.
நாட்டின் அரசியல் தலைமைத்துவம் அரசியல் ஸ்திரத்தன்மையை உருவாக்கி பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணாவிட்டால், முப்படைகளின் மகாசங்கத்தினர் ஒன்றிணைந்து சங்க மாநாட்டை பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நான்கு பிரேரணைகளை சமர்ப்பித்த பிரதம தேரர்கள் இதன் போது எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
