அனைத்துக்கும் பசிலே காரணம் - அமைச்சர் விமல் பகிரங்க குற்றச்சாட்டு
அரசாங்கத்தின் அங்கம் வகிக்கும் பதினொரு (11) கட்சிகள் தமது தேசியக் கொள்கையை வெளியிடும் நிகழ்வில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவை அமைச்சர் விமல் வீரவன்ச கடுமையாக சாடியுள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு நிதியமைச்சர் மீது குற்றம் சுமத்திய அமைச்சர் வீரவன்ச, நாடு பேரழிவாக மாறும் வரை அவர் காத்திருப்பதாகவும், அதனால் பலம் வாய்ந்த நாடுகள் சாதகமாகப் பயன்பெறும் என்றும் குற்றம் சாட்டினார்.
நியமனங்கள் வழங்கப்படாததால் கடந்த 6 மாதங்களாக நிதி அமைச்சரை சந்திக்க முடியவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மத்திய வங்கி ஆளுநரும் நிதியமைச்சரும் சந்திக்காத நிலையில் ஒரு நாடு எவ்வாறு பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியும் என அமைச்சர் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
கறுப்புச் சந்தை டொலர் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காகவும், வெளிநாட்டு நாணய நிலைமையை மேலும் பலவீனப்படுத்தியதற்காகவும் அவர் நிதியமைச்சரை கடுமையாக சாடினார்.
இதேவேளை, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பதினொரு (11) கட்சிகள் தமது கூட்டு தேசியக் கொள்கையை இன்று வெளியிட்டன. ஜனநாயக சுதந்திர முன்னணி, லங்கா சமசமாஜக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, தேசிய காங்கிரஸ், பிவித்துரு ஹெல உறுமய, ஸ்ரீலங்கா மகாஜன கட்சி, விஜய தரனை தேசிய சபை, மற்றும் எக்சத் மகாஜன கட்சி ஆகிய கட்சிகள்இதில்அங்கம் வகிக்கின்றன.
தேசிய கொள்கை இன்று ஸ்ரீ ஜயவர்தனபுர மொனார்க் இம்பீரியல் மண்டபத்தில் வெளியிடப்பட்டது. இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடிகளுக்கு குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகளை கொண்டதாக தேசிய கொள்கை உள்ளதாக கட்சி தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் முன்மொழிவுகளையும் தமது கொள்கையில் உள்ளடக்கியுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
