சர்வ கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமையுங்கள் - கோட்டாபயவிடம் கோரிக்கை!
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வுகாண அனைத்து கட்சிகளும் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவங்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாம் தற்போது இருப்பது சாதாரண நிலைமையில் அல்ல என்பதை அனைவரும் அறிவோம். எமது வரலாற்றில் மிகவும் மோசமான நெருக்கடியை நாம் எதிர்நோக்கி வருகின்றோம்.
இந்த நிலைமையில் இருந்து நாட்டை மீட்டு எடுப்பதே அவசியமானது. நாட்டை மேலும் மேலும் அதளபாதாளத்திற்குள் தள்ளக் கூடாது. வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை பூஜ்ஜிய மட்டத்திற்கு செல்ல இடமளிக்காது.
முடிந்தவரை அதனை கட்டுப்படுத்தி, நாட்டை ஸ்திரமான நிலைமைக்கு கொண்டு செல்ல வேண்டிய சவால் எமக்கு இருக்கின்றது. அதனை செய்ய தற்போதைய அரசாங்கத்தில் இருப்போருக்கு முடியும் என நான் நினைக்கவில்லை.
இந்த பிரச்சினைக்கு சாதாரண தீர்வுகள் சரியாகாது. அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச உடனடியாக தான் நியமித்துள்ள அமைச்சரவையை கலைத்து விட்டு, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இணக்கப்பாட்டுக்கு வந்து, இணக்கப்பாட்டுக்கு வரும் அனைத்து கட்சிகளும் உள்ளடங்கும் வகையில் புதிய அமைச்சரவையை நியமிக்க வேண்டும்.
அந்த கட்சிகளின் கருத்துக்கள் யோசனைகளை கேட்டறிந்து, இடைக்கால அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துமாறு அரச தலைவரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
அந்த இடைக்கால அரசாங்கத்தின் ஊடாக நெருக்கடிக்கு தீர்வுகாணும் முடிவுகளை எடுத்து, அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, நாட்டில் முடிந்தளவுக்கான ஸ்திரத்தன்மை ஏற்படுத்தி, அதன் பின்னர் பொதுத் தேர்தலை நாட்டுக்கு மக்களுக்கு வழங்குமாறும் கோருகிறோம்.
அரசியலமைப்பு ரீதியான இந்த நடவடிக்கை மாத்திரமே பாதிக்கப்பட்டு அவல குரல் எழுப்பும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பதாக அமையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
