ஜனாதிபதி கோட்டாபயவின் விசேட வேண்டுகோள் - உடனடியாக பசிலை சந்தித்த அமைச்சர்கள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வேண்டுகோளுக்கு இணங்க, புதிதாக நிதியமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்ட பசிலுடன் அமைச்சர்களான உதய கம்மன்பிலவும், விமல் வீரவன்சவும் கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிற்கும் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த சந்திப்பானது ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் வார இறுதியில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதுடன், இப்பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாகவும் சுமூகமாகவும் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சந்திப்பில் வைத்து அமைச்சர் பசில் ராஜபக்ச, எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பினை அரசாங்கம் எதிர்கொண்டுள்ளதால் அனைத்து அமைச்சர்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசாங்கத்திற்குள் காணப்படும் நெருக்கடிகள் குறித்து ஆராய வேண்டும், கலந்துரையாட வேண்டும். அத்துடன் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமைச்சர்கள் விமல் வீரவன்சவும், உதய கம்மன்பிலவும் ஐக்கியத்துடன் செயற்படுவதற்கும் அரசாங்கத்திற்கு உறுதியான ஆதரவை வழங்குவதற்கும் இணங்கியுள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.