யாழில் சைக்கிளில் பயணித்த பெண்ணிடம் கைவரிசை : சந்தேகநபர் அதிரடி கைது
புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை அறுத்த சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் (19) சுன்னாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதற்கிணங்க விசாரணைகளின் அடிப்படையில், சம்பவம் இடம்பெற்று 24 மணிநேரத்துக்குள் அளவெட்டி பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் அறுத்த சங்கிலியை அடகு வைத்துள்ள விடயம் காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன் குறித்த கொள்ளை சம்பவத்திற்கு அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகள் - பு.கஜிந்தன்
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணத்தில் (Jaffna) வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த பெண்ணொருவரின் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் அறுத்துச் சென்றுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் நேற்றைய தினம் (18.10.2025) சனிக்கிழமை மாலை யாழ். புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பெண்ணொருவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இரு வழிப்பறி கொள்ளையர்கள், பெண்ணின் சங்கிலியை அறுத்து மோட்டார் சைக்கிளில் தப்பியோடியுள்ளனர்.
கைது செய்ய நடவடிக்கை
குறித்த சம்பவம் அருகில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ள காணொளிகள் அடிப்படையில், காவல்துறையினர் வழிப்பறி கொள்ளையர்களை அடையாளம் கண்டுள்ளனர்.
அத்துடன், கொள்ளையர்கள், கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் அடையாளம் கண்டுள்ளனர்.
அதன் அடிப்படையில் இருவரையும் கைது செய்வதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
