கொழும்பில் கைது செய்யப்பட்ட பெண்! முடக்கப்பட்ட பல மில்லியன் கணக்கான சொத்துக்கள்
போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பெருமளவிலான சொத்துக்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 14, பெர்குசன் வீதியில் வசிக்கும் 53 வயதான பெண்ணொருவரே சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை தலைமை ஆய்வாளருக்கு (IGP) கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
இதன் தொடர்ச்சியாக, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை அடுத்து, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் அவருக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் பணக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில், குறித்த முடக்க உத்தரவுகளை கொழும்பு மற்றும் நீர்கொழும்பு உயர் நீதிமன்றங்கள் நீடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சொத்துக்கள்
இவ்வாறு முடக்கப்பட்ட சொத்துக்களில் ஜா-எல பகுதியில் உள்ள ரூ. 1.4 மில்லியன் மதிப்புள்ள 8.66 பேர்ச் நிலம், 6 வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்பட்டுள்ள ரூ. 5.9 மில்லியன் பணம், கொழும்பு 14 பகுதியில் உள்ள ரூ. 22.5 மில்லியன் மதிப்புடைய 3 கடை அறைகள், அதே பகுதியில் உள்ள ரூ. 7.5 மில்லியன் மதிப்புள்ள மற்றொரு கடை அறை மற்றும் ரூ. 20 மில்லியன் மதிப்புடைய மூன்றடுக்கு வீடு மற்றும் நிலமும் அடங்கும் என கூறப்படுகிறது.

இந்த சொத்துக்கள் அனைத்தும் போதைப்பொருள் வியாபாரம் மூலமே திரட்டப்பட்டவை என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், சந்தேகநபரான பெண் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |