வெளிநாடொன்றில் இலங்கை பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு
குவைத்தில் வீட்டு வேலை செய்து வந்த நிலையில் 7 வருடங்கள் கழித்து இலங்கை திரும்பவிருந்த நாளில் பெண் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாத்தளை யடவத்த பிரதேசத்தில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தாயான 50 வயதுடைய ஜி.அனோமா என்பவரே உயிரிழந்தவராவார்.
உயிரிழந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உள்ளதால், அரசு முறையான விசாரணை நடத்த வேண்டும் என பெண்ணின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
7 ஆண்டுகளுக்கு முன்பு குவைத் பயணம்
தனது குழந்தைக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் 7 ஆண்டுகளுக்கு முன்பு அவர் குவைத் சென்றுள்ளார். குவைத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்த அவர், ஏப்ரல் 26 ஆம் திகதி தாய்நாட்டிற்குத் திரும்பத் தயாராக இருந்தார். இதுபற்றி அவர் தனது தாயாருக்கு தொலைபேசியில் தெரிவித்தார்.
தாயை வரவேற்க கட்டுநாயக்க சென்ற மகன்
மகன் சதுரங்க தம்மிக்க தனது அன்புத் தாயை வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார், ஆனால் அவர் வரவில்லை. உடனடியாக கலவரமடைந்த அவர், விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது உரிய பதில் கிடைக்காததால் கட்டுநாயக்க காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
விமான நிலைய அதிகாரிகளிடம் காவல்துறையினர் விசாரித்தபோது, குவைத்தில் இருந்து திருமதி அனோமா விமானம் ஏறவில்லை என்பது தெரியவந்தது. பின்னர், இதுபற்றித் தெரிந்து கொள்ள அவரது நண்பர்கள் சிலர் அவர் வேலை செய்த குவைத் வீட்டுக்குச் சென்றனர். அவர் தூக்கிட்டு இறந்துவிட்டதாக வீட்டின் முதலாளி கூறினார்.
குவைத் தூதரகத்தின் ஊடாக கிடைத்த தகவலின் படி குவைத்தில் இரண்டு இலங்கை சடலங்கள் இருப்பதாகவும் அதில் ஒன்று தனது தாயாரின் சடலம் என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் திருமதி அனோமாவின் மகன் தம்மிக தெரிவித்துள்ளார்.
தாய் தூக்கிலிட எந்த காரணமும் இல்லை எனவும் இது குறித்து அரசு முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
