அரசியலில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் ஐம்பது வீதம் வழங்கப்பட வேண்டும் - சுமந்திரன்
இலங்கை அரசியலில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் ஐம்பது வீதம் வழங்கப்பட வேண்டும் என்பதே தனது தனிப்பட்ட நிலைப்பாடு என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதனை சட்டமாக்குவதற்கான நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலில் பெண்களின் வகிபாகத்தை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிகளவான பெண்கள் கலந்து கொண்டதுடன், தங்களது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை காட்சிப்படுத்தியிருந்தனர். மேலும், மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
