பெண்கள் அரசியல் ரீதியாக முன்னுக்குவர வேண்டும் - ரூபவதி கேதீஸ்வரன்
பெண்கள் அரசியல் ரீதியாக முன்னுக்குவர வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் (Rupavathi Ketheeswaran) தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அமைப்பான மகா சக்தி மகளிர் சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
மகளிர் என்றால் உண்மையிலேயே நாங்கள் பெண்ணியம் கதைப்பதல்ல. பெண்களும் ஆண்களும் இணைந்தது தான் ஒரு சமூகம் அல்லது அடிப்படையாக ஒரு குடும்பம் அந்த வகையில் இருபாலாரும் இணைந்து அவரவர்களுடைய பங்களிப்பை சரியாக வழங்குகின்ற போது ஒரு ஆரோக்கியமான குடும்ப கட்டமைப்பை அமைத்துக்கொள்ள முடியும்.
கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரையிலே பல்வேறு குடும்பங்களில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் பெண்கள் பல்வேறு விதமாக பாதிக்கப்படுகின்ற சம்பவங்கள் அனுதினமும் இடம்பெறுகின்றது.
இது தொடர்பாக நாங்கள் உத்தியோகத்தர்கள் மூலமாகவும் பத்திரிக்கை செய்திகள் மூலமாகவும் அறிகின்றோம்.
கிளிநொச்சி மாவட்டம் மட்டுமல்ல பல்வேறு பகுதிகளிலும் இந்த விடயங்கள் இருப்பதற்கு காரணம் உண்மையில் பெண்மையை சரியான முறையிலே மதிக்காதது தான் அடிப்படை காரணமாக அமைந்துள்ளது.
இங்கிருக்கின்ற பெண்களாகிய நீங்களும் பல்வேறு வேதனைகளையும் வலிகளையும் தாண்டி சாதனை பெண்களாக நீங்கள் மிளிரவேண்டும். குறிப்பாக இந்த மகா சக்தி நிறுவனமானது மாவட்டத்தில் ஒரு பெயர் சொல்லக்கூடிய நிறுவனமாக மாறவேண்டும்.
இந்த அமைப்பில் ஒரு அரசியல் பிரமுகரையும் நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள் அந்தவகையிலே பெண்கள் அரசியல் ரீதியாகவும் நாங்கள் முன்னுக்குவரதான் வேண்டும்.
எனவே பெண்களால் அனைத்து துறையிலும் சாதிக்க முடியும் என்பதற்கு மகா சக்தி நிறுவனமும் இன்னும் சிறந்து விளங்க வேண்டும். அனைவரையும் வாழ்த்தி உங்களுடைய கால்களில் நீங்கள் நிற்பதனூடாக உங்களுடைய பொருளாதாரம் மேம்பட தக்கதாக இந்த மகாசக்தி நிறுவனம் உங்களை தொடர்ந்தும் வழிநடத்த பாராட்டுக்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
