சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக பாஸ்கரன் கந்தையா முன்னெடுத்த திட்டம்
2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்காக தமிழர் தாயகம் முழுவதும் வெண்கரம் அறக்கட்டளை முன்னெடுத்த செயலமர்வுகள் இன்றுடன் (28) நிறைவடைந்துள்ளன.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் நடைபெற்ற இந்தச் செயலமர்வுகளின் இறுதிநாள் நிகழ்வில் பாஸ்கரன் கந்தையா பங்கேற்றிருந்தார்.
இச்செயலமர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு 6 பாடங்களுக்கான கையேடுகளைத் தயாரித்து வழங்குமாறு வெண்கரம் அமைப்பு விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, முதற்கட்டமாக 2,000 மாணவர்களுக்கான கையேடுகளைப் பாஸ்கரன் கந்தையா தயாரித்து வழங்கினார்.
வழங்கப்பட்ட கையேடுகள்
அதனைத் தொடர்ந்து, அமெரிக்காவில் வசிக்கும் தனது நண்பரும் விஞ்ஞானியுமான சிவாவின் ஒத்துழைப்புடன் மேலும் 2,000 மாணவர்களுக்கான கையேடுகளும் வழங்கப்பட்டன. இதன் மூலம் மொத்தமாக 4,000 மாணவர்களுக்கு 6 பாடங்களுக்கான கையேடுகள் சென்றடைந்துள்ளன.

இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பாஸ்கரன் கந்தையா, எமது தாயகத்தில் நமக்கு இருக்கும் ஒரே சொத்து கல்வி மட்டுமே எனச் சுட்டிக்காட்டினார்.
இந்தத் தேசம் கல்வியால் தன்னிறைவு பெற வேண்டும் என்பதோடு, இங்கு வாழும் மாணவர்கள் கல்வியில் உயர்வை அடைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நன்றி தெரிவிப்பு
"வீட்டுக்கு ஒரு பட்டதாரி" என்ற கொள்கையுடன் முன்னெடுக்கப்படும் இந்தச் செயற்பாட்டின் ஊடாக, தமிழராக நாம் கல்வியால் உயர வேண்டும் என்பதே தனது கனவு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக இந்தச் செயலமர்வுகளைச் சிறப்பாக ஏற்பாடு செய்து ஒத்துழைப்பு நல்கிய வெண்கரம் அறக்கட்டளைக்கு பாஸ்கரன் கந்தையா தனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



