கனடாவில் வெற்றிகரமாக நிறைவடைந்த உலகத்தமிழ் ஆய்வு மாநாடு
கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட 'அனைத்துலக தமிழர் பேரவை' தலைமையில் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை கனடாவின் டொராண்டோ ஸ்கார்ப்ரோ நகரில் உள்ள சென்டானியல் கல்லூரியின் ஈவென்ட் சென்டரில் நடைபெற்றது.
இந்நிலையில் இதுதொடர்பில் நிர்வாகக் குழுவின் தலைவர் நிமால் விநாயமூர்த்தி அவரது கருத்துக்களையும் நன்றியையும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“அன்பானவர்களே, கடந்த நான்கு நாட்களாக நாம் ஒரு முக்கியமான அறிவுப் பயணத்தில் ஒன்றிணைந்திருந்தோம். “செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இம்மாநாடு, தமிழின் தொன்மையையும் பெருமையையும் போற்றுவதுடன், மாறிவரும் உலகில் தமிழும் தமிழர்களும் எவ்வாறு முன்னேற வேண்டும் என்பதற்கான பல புதிய சிந்தனைகளையும் முன்வைத்துள்ளது.
உலகின் 13 நாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற 96 ஆய்வுக் கட்டுரைகள், நான்கு சிறப்பு அமர்வுகள், இளைஞர்களின் பங்களிப்பு என்பன இம்மாநாட்டிற்கு மேலும் வலுச்சேர்த்துள்ளன. பல்வேறு நாடுகளிலிருந்து வருகை தந்த அறிஞர்களும் ஆய்வாளர்களும் தமது ஆய்வுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

தமிழ்மொழி, இலக்கியம், வரலாறு, பண்பாடு, கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், செய்யறிவு மற்றும் சமூக முன்னேற்றம் தொடர்பாகப் பல முக்கியமான கருத்துகளும் பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்ட ஆய்வு முடிவுகளும் பரிந்துரைகளும் மாநாட்டு அரங்குகளுடன் நின்றுவிடக்கூடாது. எதிர்வரும் மாதங்களில் அவற்றைத் தொகுத்து, நடைமுறைப்படுத்தக்கூடியவற்றை அடையாளம் கண்டு, பல்கலைக்கழகங்கள், ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சமூக அமைப்புகளுடன் இணைந்து செயற்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுப்போம்.
ஏனெனில், இந்த மாநாட்டின் உண்மையான வெற்றி, நாம் இங்கு என்ன பேசினோம் என்பதில் மட்டுமல்ல; இங்கிருந்து நாம் என்ன செயற்பாடுகளை முன்னெடுக்கப் போகிறோம் என்பதில்தான் தங்கியுள்ளது. அன்பானவர்களே, 22 மாதங்களுக்கு முன்னர் அனைத்துலகத் தமிழர் பேரவையை உருவாக்கியபோது, எமக்கென்று ஒரு தெளிவான நோக்கம் இருந்தது.
உலகெங்கும் வாழும் தமிழர்களின் அறிவையும், அனுபவத்தையும், ஆற்றலையும், வளங்களையும் ஒன்றிணைத்து, எமது மொழி, பண்பாடு மற்றும் சமூகங்களின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்பதே அந்த நோக்கமாகும்.
இன்று, நாம் ஆரம்பத்தில் எதிர்பார்த்ததைவிடப் பேரவையின் செயற்பாடுகள் வளர்ந்திருப்பதைப் பார்க்கும்போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் நம்பிக்கையும் ஏற்படுகின்றன.
இந்த வளர்ச்சி தனிப்பட்ட ஒருவரின் சாதனையல்ல. எமது இடைக்கால நிர்வாகக் குழுவினர், தன்னார்வலர்கள், ஆதரவாளர்கள் மற்றும் எம்முடன் இணைந்து பயணித்த அனைவரினதும் அர்ப்பணிப்பும் கூட்டு முயற்சியுமே இதற்குக் காரணமாகும். எமது இடைக்கால நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் இன்னும் இரண்டு மாதங்களில் நிறைவடையவுள்ளது.
அடுத்தகட்டமாக, உறுப்பினர் சேர்க்கையை ஆரம்பித்து, ஜனநாயக முறையில் புதிய நிர்வாகக் குழுவைத் தெரிவுசெய்யவுள்ளோம். உலகெங்கும் வாழும் தமிழர்கள் இந்தப் பேரவையில் இணைந்து, எமது பொதுவான எதிர்காலத்தை வடிவமைப்பதில் பங்காற்றுமாறு அன்புடன் அழைக்கிறேன்.
இந்தப் பேரவை ஒரு சிலருக்கான அமைப்பாக அல்லாமல், உலகத் தமிழர்களின் அறிவையும் ஆற்றலையும் ஒன்றிணைக்கும் பரந்த தளமாக வளர வேண்டும் என்பதே எமது விருப்பமாகும். அன்பானவர்களே, எமது வரலாற்றைப் பற்றிப் பேசும்போது, ஈழத் தமிழர்களின் நீண்டகாலப் போராட்டங்களையும், இழப்புகளையும், தியாகங்களையும் நாம் மறந்துவிட முடியாது.
நீதிக்காகவும் விடுதலைக்காகவும் தமது வாழ்வை அர்ப்பணித்த எமது சகோதர சகோதரிகளை இத்தருணத்தில் ஆழ்ந்த மரியாதையுடன் நினைவுகூர்கிறேன். போரினாலும் இடப்பெயர்வுகளாலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வலியையும் நாம் உணர்கிறோம்.
எமது வரலாற்றையும், எமது மக்களின் அனுபவங்களையும், அவர்களின் தியாகங்களையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. அதேவேளை, நீதி, மனித கண்ணியம், உரிமைகள் மற்றும் நிலையான அமைதியை அடிப்படையாகக் கொண்ட எதிர்காலத்தை உருவாக்குவதும் எமது பொறுப்பாகும். எமது மக்களின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் நாம் தொடர்ந்து செயற்பட வேண்டும்.
எமது கடந்தகால அனுபவங்கள் எமக்கு வலியையும் தந்துள்ளன; அதேநேரம், மீண்டெழுவதற்கான மனவலிமையையும் தந்துள்ளன. அந்த மனவலிமையை எமது சமூகங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கான ஆற்றலாக மாற்ற வேண்டும். அன்பானவர்களே, ஓலைச்சுவடிகளிலிருந்து அச்சு நூல்களுக்கும், அங்கிருந்து கணினி உலகிற்கும் வளர்ந்த தமிழ், இன்று செய்யறிவு உலகிலும் தனது இடத்தைப் பெற வேண்டியுள்ளது.
தமிழைப் பாதுகாப்பது மட்டும் போதாது. அறிவியல், தொழில்நுட்பம், ஆய்வு மற்றும் கல்வித் துறைகளிலும் தமிழை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதற்கான பல புதிய சிந்தனைகளை இந்த மாநாடு வழங்கியுள்ளது. தமிழ் ஒரு தொன்மையான மொழி என்பதில் நாம் பெருமைப்படுகிறோம்.
அதேவேளை, அது நவீன அறிவையும் தொழில்நுட்பத்தையும் தாங்கி நிற்கக்கூடிய மொழியாகத் தொடர்ந்து வளர வேண்டும். அந்த வளர்ச்சிக்கு உலகெங்கும் வாழும் தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் இளைய தலைமுறையினரின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும்.
அன்பானவர்களே, உலகெங்கும் வாழும் தமிழர்கள் இன்று கல்வி, மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பம், வணிகம், தொழில்முனைவு எனப் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். ஆனால், இந்த அறிவையும் அனுபவத்தையும் வளங்களையும் நாம் எந்த அளவிற்கு ஒருங்கிணைத்துப் பயன்படுத்துகிறோம் என்ற கேள்வியை நமக்குள் எழுப்பிக்கொள்ள வேண்டும்.
உலகத் தமிழர்களின் உண்மையான வலிமை, தனித்தனியாக நாம் பெற்றுள்ள வெற்றிகளில் மட்டுமல்ல; அவற்றை ஒன்றிணைத்து எமது சமூகங்களின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்துவதில்தான் உள்ளது. அந்த நோக்கத்துடன், உலகத் தமிழர் பொருளாதார மற்றும் சமூக வலையமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம்.
குறிப்பாக, இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளின் நிலையான அபிவிருத்திக்கும், உலகெங்கும் வாய்ப்புகள் குறைந்த நிலையில் வாழும் தமிழ்ச் சமூகங்களின் முன்னேற்றத்திற்கும் இந்த வலையமைப்பு பங்களிக்க வேண்டும். கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, தொழில்முனைவு, முதலீடு, வர்த்தகத் தொடர்புகள் மற்றும் வழிகாட்டல் ஆகிய துறைகளில் நடைமுறைச் செயற்பாடுகளை உருவாக்குவதே எமது நோக்கம்.
உலகெங்கும் உள்ள தமிழ்த் தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள், கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சமூக அமைப்புகளை இணைத்து, புதிய வாய்ப்புகளை உருவாக்க விரும்புகிறோம். எமது மக்களுக்கு உதவிகளை வழங்குவதுடன் நின்றுவிடாமல், அவர்கள் தமது சொந்தக் காலில் நின்று, கண்ணியத்துடனும் பொருளாதாரத் தன்னிறைவுடனும் வாழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும்.
உதவிகளைப் பெறும் சமூகமாக மட்டுமல்லாமல், வாய்ப்புகளை உருவாக்கும் சமூகமாகவும் நாம் வளர வேண்டும். இந்த முயற்சிகளில் இளைய தலைமுறையினரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அவர்களின் புதிய சிந்தனைகளையும், தொழில்நுட்ப அறிவையும், படைப்பாற்றலையும் எமது சமூகங்களின் முன்னேற்றத்துடன் இணைக்க வேண்டும்.
இந்த மாநாட்டில் இளைஞர்கள் காட்டிய ஆர்வமும் பங்களிப்பும் எமக்கு மிகுந்த நம்பிக்கையைத் தருகின்றன. அன்பானவர்களே, இன்றைய மாலை இன்னுமொரு வகையில் சிறப்பானது. தமிழ் ஆய்வு, அறிவியல், தொழில்நுட்பம், கலை, பண்பாடு, இலக்கியம், பொதுச் சேவை மற்றும் சமூக முன்னேற்றம் ஆகிய துறைகளில் சிறப்பான பங்களிப்புகளை வழங்கிய பெருமக்களை இன்று நாம் கௌரவிக்கிறோம்.
இந்த விருதுகள் தனிப்பட்ட சாதனைகளுக்கான அங்கீகாரம் மட்டுமல்ல. தமது அறிவையும் திறமையையும் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்தவர்களுக்கு நாம் செலுத்தும் மரியாதையாகும். அவர்களின் வாழ்வும் பணிகளும், அர்ப்பணிப்பும் எமது இளைய தலைமுறைக்கு முன்னுதாரணமாக அமைகின்றன.
இன்று விருதுகளைப் பெறும் அனைவருக்கும் அனைத்துலகத் தமிழர் பேரவையின் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களது சாதனைகள் மேலும் பலரைச் சாதிக்கத் தூண்டட்டும். அன்பானவர்களே, இத்தருணத்தில், இந்த மாநாட்டின் வெற்றிக்குப் பின்னால் நின்று உழைத்த அனைவருக்கும் மீண்டும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
மாநாட்டின் வழிநடத்தல் குழு, கல்வி மற்றும் ஆய்வுக் குழு, ஏற்பாட்டுக் குழு, தன்னார்வலர்கள், நிறுவனப் பங்காளர்கள், ஊடகப் பங்காளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த பல மாதங்களாகப் பலர் தமது நேரத்தையும், ஓய்வையும், குடும்பத்துடன் செலவிட வேண்டிய பொழுதுகளையும் இந்த மாநாட்டிற்காக அர்ப்பணித்துள்ளனர்.
சிலர் மேடையில் தெரிந்திருக்கலாம். பலர் திரைக்குப் பின்னால் இருந்து அமைதியாக உழைத்துள்ளனர். அவர்களின் ஒவ்வொருவருடைய பங்களிப்பும் இந்த மாநாட்டின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. குறிப்பாக, இந்த மாநாட்டின் மீது நம்பிக்கை வைத்து எமக்கு நிதியுதவியும் பல்வேறு வகையான ஆதரவுகளும் வழங்கிய அனைத்து அனுசரணையாளர்களுக்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் ஆதரவு இல்லாமல் இவ்வளவு பெரிய முயற்சியை வெற்றிகரமாக முன்னெடுத்திருக்க முடியாது. இந்த மாநாட்டிற்காக உழைத்த அனைவருக்கும், எம்முடன் இணைந்து பயணித்த அனைவருக்கும், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வருகை தந்து இம்மாநாட்டைச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றி.
அன்பானவர்களே, நிறைவாக, ஒரு கருத்தை மட்டும் வலியுறுத்த விரும்புகிறேன். நாம் தமிழின் தொன்மையைப் பற்றிப் பெருமைப்படுகிறோம். அந்தப் பெருமை நியாயமானது. ஆனால், எமது பெருமை கடந்தகால வரலாற்றுடன் மட்டும் நின்றுவிடக்கூடாது.
எமது முன்னோர்கள் எமக்கு ஒரு செழுமையான மொழியையும் பண்பாட்டையும் விட்டுச் சென்றுள்ளனர். நாம் எமது அடுத்த தலைமுறைக்கு எதை விட்டுச் செல்லப்போகிறோம்? இந்தக் கேள்வியை நாம் ஒவ்வொருவரும் எமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு மொழியையும் பண்பாட்டையும் மட்டுமல்லாமல், கல்வி வாய்ப்புகளையும், பொருளாதார வலிமையையும், உலகளாவிய தொடர்புகளையும், நம்பிக்கையான எதிர்காலத்தையும் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
அவர்கள் தமது அடையாளத்தைப் பெருமையுடன் பேணிக்கொண்டு, உலகின் எந்தப் பகுதியிலும் தன்னம்பிக்கையுடனும் கண்ணியத்துடனும் வாழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும். அதுவே எமது தலைமுறையின் பொறுப்பு. அதற்காக நாம் தனித்தனியாக அல்லாமல், ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
இந்த மாநாடு ஒரு முடிவல்ல; புதிய சிந்தனைகளுக்கும் புதிய தொடர்புகளுக்கும் புதிய செயற்பாடுகளுக்கும் தொடக்கமாக அமையட்டும். தமிழால் ஒன்றிணைவோம். அறிவால் வலுப்பெறுவோம். கூட்டு முயற்சியால் எமது சமூகங்களின் எதிர்காலத்தை வளப்படுத்துவோம். அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நன்றி. வணக்கம்” எனத் தெரிவித்திருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |