உலகத் தமிழ் புலம்பெயர் நாள் : கொண்டாட்டங்களுக்கு தயாராகும் தமிழகம்
உலகத் தமிழ் புலம்பெயர் நாள் எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் சென்னையில் கொண்டாடப்படவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தற்போது மேற்கொண்டு வருகிறது.
ஜனவரி 12 ஆம் திகதி வருடாந்தம் உலகத் தமிழ் புலம்பெயர் நாள் கொண்டாடப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்ராலின் அறிவித்திருந்த நிலையில், இந்த வருடம் மூன்றாவது முறையாகவும் குறித்த நிகழ்வு நடத்தப்படவுள்ளது.
உலகெங்கும் வாழும் தமிழர்கள்
தமிழர்கள் இன்று உலகெங்கும் பரவி வாழ்ந்து வருகிறார்கள்.
உலக நாடுகளோடு கொள்கொடை முறையில் தமிழ்மொழி வளர்ச்சியையும் போற்றிப் பாதுகாத்து வருகிறார்கள்.
இவ்வாறெல்லாம் உலகின் பல நாடுகளில் புகழோடு விளங்கும் தமிழ்மொழியை பல நாடுகளிலும் வளர்ப்பதில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி வருகிறது.
உலகத் தமிழ் புலம்பெயர் நாள்
இந்த நிலையில், உலகத் தமிழ் புலம்பெயர் நாள் எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் கொண்டாடப்படவுள்ளது.
புலம் பெயர்ந்த தமிழ் பிரதிநிதிகள் 13 பேரைக் கொண்டு அமைக்கப்பட்ட புலம்பெயர் தமிழர் நல வாரியம் அரசால் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த இரண்டு நாள் கொண்டாட்டத்தில் கிராமிய கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் என பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முன்பதிவு
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் https://forms.gle/MnsKsn9EfSMSCu8U9 எனும் இணையத்தளத்தில் தங்கள் விபரங்களை பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளனர்.
பதிவு செய்பவர்களுக்கான தங்குமிடம் உள்ளிட்ட விருந்தோம்பல் வசதிகள் தமிழக அரசின் புலம்பெயர் தமிழர் நல வாரியத்தால் செய்து கொடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |