தமிழர் தாயகத்தின் அவலங்களை தீர்க்க புதிய கட்டமைப்புகள் அவசியம் - உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாட்டில் முன்மொழிவு
உலகளாவிய தமிழ்தொழில் முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்களின் மூன்று நாள் லண்டன் மாநாடு இன்றுடன் முடிவடைந்துள்ளது.
புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பொருளாதார பலம் உலகளாவிய ரீதியில் காத்திரமாக முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும் என்ற செய்தியுடன் இந்த மாநாடு முடிவுக்கு வந்துள்ளது.
குறைடன் நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் கடந்த 5 ஆம் திகதி முதல் இரு அமர்வுகளாக இடம்பெற்று வந்த இந்த மாநாடு, இன்று தனது இறுதி அமர்வுகளை நடத்தியிருந்தது.
இன்றைய நாள் நிகழ்ச்சி நிரலில் வடக்கு கிழக்கின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையிலான திட்டங்கள் மற்றும் அதற்குரிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றிருந்தன.
இன்றைய மாநாட்டில் பங்கெடுத்து உரையாற்றிய ஐ.பி.சி தமிழ் குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன் தமிழர் தாயகத்தின் சமகால அவலங்கள் மற்றும் நெருக்கடிகளை தீர்க்க புதிய கட்டமைப்புகள் அவசியம் என்பதை குறிப்பிட்டிருந்தார். அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்கும் தான் தயார் என்பதையும் கூறியிருந்தார்.
புலம்பெயர் தமிழ் சமுகத்தின் பொருளாதார பலம் உலகளாவிய ரீதியில் முக்கியமான ஒரு சக்தியாக மாறியுள்ள நிலையில், அந்த வலுவை ஓரணியில் திரட்டும் நோக்கத்துக்குரிய முன்னெடுப்பில் றைஸ் அல்லது எழுமின் என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடத்தப்பட்டது.
ஐரோப்பிய நாடுகள் அமெரிக்க கனடா ஆகிய வடஅமெரிக்க நாடுகள் இந்தியா மலேசியா உட்பட 70 நாடுகளில் உள்ள தமிழ்தொழில் முனைவோர் மற்றும் தொழில்வல்லுனர்களும் தமிழகத்தின் சார்பான பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கெடுத்து 3 நாட்களாக தமது கருத்துக்களை வழங்கியிருந்தனர்.
இலங்கையில் தமிழர் தாயகத்திலும் தமிழகத்திலும் விவசாய உற்பத்திகளை அதிகரித்து உலகளாவிய ரீதியில் ஒரு முன்னணி பசுமைச் சங்கிலி தமிழர்களால் உருவாகப்படும் முன்னெடுப்புகள் உட்பட்ட சில முக்கியமான திட்டங்கள் இந்தக் கலந்துரையாடல்களில் முக்கிய இடம்பிடித்திருந்தது.
இறுதியாக கலை நிகழ்ச்சிகளுடன் இம்மாநாடு முடிவடைந்தது.
















