உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தின் புதிய பணிப்பாளர் அவை தெரிவு
உலகத் தமிழர் வரலாற்றுவளாகத்தில் ஆண்டு பொதுக்கூட்டமும் புதிய பணிப்பாளர் அவை தெரிவும் 08.02.2026 அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தின் நிர்வாகப் பொறிமுறையின் அடிப்படையில் இரண்டு ஆண்டுக்கு ஒரு தடவை பணிப்பாளர் அவை புதிதாக தெரிவு செய்யும் நடைமுறை உள்ளது.
அதற்கு அமைவாக 10 ஆண்டுகளை கடந்து பயணிக்கும் உலகத்தமிழர் வரலாற்று வளாக நிர்வாகம் தனது ஆறாவது பணிப்பாளர் அவையினை 08.02.2026 அன்று தெரிவு செய்தது.
பொதுச்சுடர் ஏற்றல்
முற்பகல் 12:00 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.

பொதுச்சுடரினை .நவமணி, ஆனந்தன், பாலா மாஸ்டர், .புலவர், இசைவதனி ஆகியோர் ஏற்றினர்.
தமிழீழ தேசியக் கொடியினை தவினோத் ஏற்ற, அக வணக்கம் நடைபெற்றது.
தொடர்ந்து பொது மாவீரருக்கான ஈகச்சுடரினை அன்சார் அவர்கள் ஏற்றினார்.
தோற்றுவிப்பாளர் அவை தலைமையில் நடைபெற்ற, ஆண்டு பொதுக்கூட்டத்தில் முன்னாள் பணிப்பாளர் வசந்தன் தலைமை உரையாற்றினார்.
தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளின் செயற்பாட்டுச் சுருக்கத்தினையும் நிர்வாக தேர்வு பொறி முறையினையும் பாலா மாஸ்டர் தெளிவு படுத்தினார்.
நடைமுறையில் இருந்த கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான நிர்வாக செயற்பாட்டினை, முன்னாள் செயலாளர் வினோதன் வழங்கியிருந்தார்.
கடந்த ஆண்டுக்கான வரவு செலவு நிதி அறிக்கையினை, பொருளாளர் விஜிதரன் வழங்கி இருந்தார்.
தொடர்ந்து உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தின் உப கட்டமைப்புகளின் செயற்பாட்டு அறிக்கையும் கணக்கறிக்கையும் வாசித்து அளிக்கப்பட்டது.
மாவீரர் பணிமனை
தமிழீழ மாவீரர் பணிமனைக்கான அறிக்கையினை பணிமனை இணைப்பாளர் சதாவும், மக்கள் நலன் காப்பக அறிக்கையினை அதன் பணிப்பாளர் விசாகனும், மகளிர் அமைப்புக்கான அறிக்கையினை அதன் பணிப்பாளர் சுகன்யாவும் , அற்புத விநாயகர் ஆலயத்தின் அறிக்கையினை அதன் அறங்காவலர்களில் ஒருவரான சுரேஸும் , அற்புத அந்தோணியார் ஆலய அறிக்கையினை அதன் நிர்வாகிகளில் ஒருவரான திலீபனும், இளையோர் செயற்பாட்டு விடயங்களை இசைவதனியும் வழங்கி இருந்தனர்.

தொடர்ந்து பிரதான நிர்வாகத்திற்கான தெரிவு நடைபெற்றது.
அதற்கு அமைவாக அடுத்த வரும் இரண்டு ஆண்டுகளுக்கான உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தின் செயற்பாட்டினை வழி நடத்திச் செல்லும் வகையில்
மேலாண்மை பணிப்பாளராக அகிலன்,
துணை மேலாண்மை பணிப்பாளராக நசீர் ,
செயலாளராக விசாகன் ,
துணைச் செயலாளராக ஈழவன் ,
பொருளாளராக அருள்,
தொடர் நிதிச் செயற்பாட்டுக்காக விஜிதரன் மற்றும் சத்யரூபன் ஆகியோர் பொதுச் சபையின் முன்மொழிதலோடும் வழிமொழிதலோடும் தெரிவு செய்யப்பட்டனர்.
தொடர்ந்து இவ்வாண்டு மாற்றப்பட வேண்டிய அல்லது இணைக்கப்பட வேண்டிய உபகட்டமைப்புகளுக்கான தெரிவு நடைபெற்றது அதன் அடிப்படையில் பொது அவையின் முழுமையான முன்மொழிதலோடும் வழிமொழிதலோடும் தெரிவு செய்யப்பட்டனர்.
புதிய மேலாண்மை பணிப்பாளர் தலைமையில் நிர்வாகம் பொறுப்பேற்கப்பட்டதனை தொடர்ந்து, இந்த ஆண்டு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களிடமிருந்து கருத்துக்களும், ஆலோசனைகளும் பெறப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |





